ஆர்ஆர்ஆர் வெளியானது : தமிழ்நாட்டில் மட்டும் 550 தியேட்டர்களில் ரிலீஸ்

பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். படத்தில் அல்லூரி சீதாராம ராஜுவாக ராம் சரண் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். கொமரம் பீம் ஆக ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். கொமரம் பீம் ஐதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே படத்தின் மையக்கரு. ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். ஒலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட இன்னும் பிற மொழிகளில் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க 10 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தமிழ்நாட்டில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் இன்று 550 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஒரு மொழிமாற்று (டப்பிங்) திரைப்படம் திரையரங்குகளில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு இணையாக 550 தியேட்டர்களில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். பாகுபலி படம் 320 தியேட்டர்களில்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.