புதுடெல்லி: இந்தியா – சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்சினை தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார்.
முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இஸ்லாமாபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தார். அங்கு காஷ்மீர் குறித்த சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வாங் யீ பாகிஸ்தானில் இருந்து நேற்று மாலையில் டெல்லி வந்து இறங்கினார். சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை குறித்து இருநாட்டு அரசுகளும் அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், வாங் யீ டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ” ஹைதராபாத் இல்லத்தில் தங்கியுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீக்கு வாழ்த்து. எங்களுடைய பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஜெய்சங்கரை சந்திப்பதற்கு முன்பு வாங் யீ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சவுத் பிளாக்கில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இதற்கு முன்பாக கடந்த, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாங் யீ , இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவாலுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தார்.
இந்தியா – சீனா இடையே கடந்த 2019-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இது 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மக்கள் ராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுவியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலால் மேலும் தீவிரமடைந்தது.
இருநாட்டு ராணுவத் தலைவர்களும் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் உண்மையான எல்லைக் கட்டுப்பாடு கோட்டை நிர்ணயிப்பதில் நிலவும் சிக்கல் இன்னும் தீர்வை எட்டவில்லை.