இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை மீட்க உயர்மட்ட அளவில் முயற்சி: மக்களவையில் அமைச்சர் உறுதி

புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த பல எம்பி.க்கள் இந்த பிரச்னையை எழுப்பினர்.  இதற்கு  வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளிக்கையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளில் 170 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அதில், 16 பேரை தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை வெளியுறவு துறை  அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருடன் ஒன்றிய அரசு உயர் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,’ என்று தெரிவித்தார்.பாக். சிறையில் 577 பேர்மக்களவையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு  அமைச்சர் முரளிதரன் அளித்த பதிலில், ‘பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இந்தியாவை சேர்ந்த 577 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், இந்திய மீனவர்களிடம்  இருந்து 1,164 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.  இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய துாதரகம் தொடர்ந்து எடுத்து வருகிறது,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.