இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 2022 மார்ச் 23ஆம் திகதி இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினம் (ITEC) ஹோட்டல் தாஜ் சமுத்திராவில் கொண்டாடப்பட்டது.
ITEC பயிற்சித் திட்டங்களில் கலந்து கொண்டவர்கள், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயிற்சிகளில் கலந்துகொண்ட பலதரப்பட்ட துறைகளையும் சார்ந்த உத்தியோகத்தர்கள், இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் e-ITEC அமர்வுகளில் கலந்துகொண்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 125 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அத்துடன் உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய கோபால் பாக்லே அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
2. இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளிலும் வலுவான நிலையில் காணப்படும் வரலாற்று ரீதியான உறவுகள் தொடர்பாக இங்கு கருத்துக்களை முன்வைத்திருந்த கௌரவ அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல அவர்கள், இலங்கையில் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி துறைகளில் மனித வள அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஆதரவை பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்காக திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பினை வலுவாக்குவதற்கான ஆர்வத்தினையும் அவர் இங்கு வெளிப்படுத்தியிருந்தார்.
3. இந்நிகழ்வில் உரையாற்றியிருந்த பிரதி உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்கள், திறன் விருத்தி செயற்பாடுகளில் இலங்கைக்காக இந்தியா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவானது உலகம் ஒரே குடும்பம் என்ற தத்துவத்தினை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டிருந்ததுடன், உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளில் ஆளுமை விருத்தி செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக இந்தியா தனது உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்தும் தெரிவித்திருந்தார். கொவிட் பெருநோய் சூழலிலும் இவ்வாறான பயிற்சிகளை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2020 ஏப்ரல் முதல் மெய்நிகர் மார்க்கங்கள் ஊடாக இவ்வாறான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை அக்காலப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 600க்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் குறித்த பயிற்சிகளின் மூலம் நன்மையடைந்துள்ளனர். இப்பயிற்சிகளில் கலந்து கொண்டிருந்தவர்கள் தமது அனுபவங்களையும் இந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4. இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழான ஓர் இருதரப்பு நிகழ்ச்சி திட்டமாக இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் (ITEC) 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் மற்றும் ஆளுமைவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பது மிகவும் முக்கியமான பணியாக உள்ளது. சிவில் மற்றும் பாதுகாப்பு துறைகளுடன் தொடர்புடைய பயிற்சிகள் வழங்கப்படும் அதேவேளை கணக்கீடு, கணக்காய்வு, வங்கியியல் மற்றும் நிதியியல் செயற்பாடுகள் முதல் சைபர் தொழில்நுட்பம் வரையிலும்; சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் முதல் முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் வரையிலும்; மனித வள அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் முதல் ஏற்பாட்டியல் மற்றும் முகாமைத்துவம் வரையிலும்; ஊடகம் முதல் நகர திட்டமிடல் வரையிலும்; கடல் சார் செயற்பாடுகள் மற்றும் விமானத்துறை சார்ந்த பொறியியல் முதல் பெண்களுக்கான மேம்பாடுகள் வரையிலுமான கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான துறைகளைச்சேர்ந்த கற்கைநெறிகள் இத்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மிக முக்கியமான ITEC பங்காளி நாடுகளில் இலங்கைக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கையைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனையோரின் தொழில் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு வருடமும் பூரண நிதி ஆதரவுடனான 402 ஆசனங்கள் இலங்கைக்காக ஒதுக்கப்படுகின்றன. ITEC குறித்த மேலதிக தகவல்களுக்கு www.itecgoi.in என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
கொழும்பு
24 மார்ச் 2022