புதுடெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக ஒன்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக அவர் எழுப்பிய கேள்விகளின் விவரங்கள் பின் வருமாறு: * உக்ரைன் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்காக சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் கல்வி விவரங்களை மாநிலங்கள் வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும்.* சீனாவில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கும், உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களுக்கும் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு முன்மொழிகிறதா? எனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* அத்தகைய மாணவர்களுக்கு சேர்க்கை மற்றும் இன்டர்ன்ஷிப் போன்ற பயிற்சி வழங்குதல் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பாக ஏதேனும் திட்டம் வகுக்க ஒன்றிய அரசு முன்மொழிகிறதா? எனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* சீனா மற்றும் உக்ரைன் பல்கலைக் கழகங்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஒன்றிய அரசு தலையிட்டு திரும்ப பெற்றுத் தர முன்வருமா? எனில், அது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?* கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவில் சிக்கி தவிக்கும் இந்திய மருத்துவ மாணவர்களையும் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களையும் ஒன்றுபோல் நடத்த ஒன்றிய அரசு முன்மொழிகிறதா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.