டில்லி
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மாணவர்கள் கல்வி தொடர மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்
ரஷ்ய ராணுவப்படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால் அங்குள்ள வெளிநாட்டவர் தாய்நாடுகளுக்குத் திரும்பி உள்ளனர். ரஷ்ய ராணுவத்தினரால் அனைத்து விமான நிலையங்களும் அடித்து நொறுக்கப்பட்டதால் வெளிநாட்டினரை அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கல்வியை இந்தியாவில் தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு இதுவரை எவ்வித முடிவையும் அறிவிக்காமல் உள்ளது.
இந்நிலையில் இன்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பி உள்ளார். அவர், “இந்தியாவுக்கு உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியைத் தொடர மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? மத்திய அரசு அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதி வழங்க உள்ளதா?” எனக் கேட்டுள்ளார்.