உத்தரப்பிரதேச வரலாற்றில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.
அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 255 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது.
இதையடுத்து, யோகி ஆதித்யநாத் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்காக லக்னோவில் உள்ள அடல் பிகாரி கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து, கேசவ் பிரசாத் மவுரியா, பிரிஜேஷ் பதக் ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும், 49 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM