துபாய்: “உலகத்தில் எந்தப் பகுதியிலும் எந்த நாட்டிலும் தமிழர்கள் இருந்தாலும், அவர்களுக்காக தமிழக அரசு குரல் கொடுப்பதும், அவர்களைப் பாதுகாப்பதும் தொடர்ந்து நடைபெறும்“ என்று துபாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாயில் நடைபெறும் உலகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் இன்று வெள்ளிக்கிழமை துபாய் உலக கண்காட்சியின் இந்திய அரங்கில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார். முதல்வருக்கு ஐக்கிய அரபு அமீரக வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர் / துபாய் உலக கண்காட்சியின் ஆணையர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் உடனிருந்தார்.
அரங்கினை திறந்து வைத்து முதல்வர் பேசியது: “உலகத்தரத்திலான இந்த எக்ஸ்போ கண்காட்சியை நடத்தி வரும் துபாய் அரசுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டின் தரத்துக்கும் திறத்துக்கும் இந்த நிகழ்வின் வெற்றியே சான்றாக அமைந்திருக்கிறது. இந்தக் கண்காட்சியின் இந்திய அரங்கில் ‘தமிழ்நாடு வாரத்தைத்’ தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முக்கியமான வளர்ந்து வரும் துறைகளில் எங்கள் மாநிலத்தின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக இந்த எக்ஸ்போ கண்காட்சி அமைந்துள்ளது.
உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பலவகைப் பொருட்களும் இந்த அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, மருத்துவம், கலை – பண்பாடு ஆகிய துறைகளோடு, தொழில்பூங்காக்கள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் பற்றிய தகவல்கள் ஆகியவையும் நாள் முழுதும் இங்குப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கை யார் பார்வையிட்டாலும், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சாதித்துள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு இந்த அரங்கு வழங்கும்.
இந்தியத் தூதரகத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துபாய் எக்ஸ்போ மற்றும் அதில் இடம்பெற்றுள்ள இந்திய அரங்கின் அமைப்பாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளை, வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை முதல்வர் பார்வையிட்டு, பேசியது: “அனைவருக்கும் என்னுடைய தமிழ் வணக்கம். துபாயில் நடைபெறக்கூடிய இந்தச் சிறப்புக்குரிய கண்காட்சியில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தினுடைய முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக இந்த துபாய்க்கு வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி. எப்படி உலகத்தில் இருக்கக்கூடிய எந்தப் பகுதிகளாக இருந்தாலும், எந்த நாடுகளாக இருந்தாலும், அங்கு இருக்கக்கூடிய தமிழர்களுக்கு நம்முடைய தமிழக அரசு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறதோ, பாதுகாப்பாக இருக்கிறதோ, அது தொடர்ந்து நடைபெறும். எனவே ஒன்றிணைந்து வேற்றுமையிலே ஒற்றுமை காணவேண்டிய நிலையில் இந்தச் சிறப்பான கண்காட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.
தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைத்த பின்னர், முதல்வர் ஸ்டாலின், ஆலிஃப் மற்றும் சவுதி அரேபியா அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வுகளின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.