உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த ஆறாண்டுகளுக்குப் பின் மீண்டும் சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும் விழாக்காலத்தில் போதிய அளவு சர்க்கரை வழங்கலை உறுதி செய்யவும் அரசு விரும்புகிறது.
அதனால் இந்தப் பருவத்தில் ஏற்றுமதிக்கு 80 இலட்சம் டன் என்னும் அளவை உச்ச வரம்பாக நிர்ணயிக்க உள்ளதாக அரசு மற்றும் சர்க்கரைத் தொழில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதத் தொடக்கத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதனால், சர்க்கரை ஆலைகளின் பங்குவிலை 6 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதிக்கு 20 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.