உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றார்.
அண்மையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக, கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, ஆளும் பாஜக, மொத்தம் உள்ள, 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 255 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இதன்படி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில்
பாஜக
ஆட்சி அமர்ந்துள்ளது. எதிர்க்கட்சியான சமாஜ்வாடி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. அப்போது, உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு, ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உத்தர பிரதே சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த கேசவ் பிரசாத் மெளிரயா, பிராமண தலைவர் பிரஜேஷ் பதக் ஆகியோர், துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பட்டாளமே கலந்து கொண்டனர். மேலும், கிரிக்கெட் மைதானத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் குழுமியிந்தனர். உத்தர பிரதேச மாநில அரசியல் வரலாற்றில், 37 ஆண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்திஅரசுப் பணி தேர்வு எழுதுவோருக்கு வருகிறது செம செக்!