`உ.பி-யால் முடிகிறது; ஏன் தமிழகத்தில் முடியவில்லை?' – கேள்வி எழுப்பும் கரும்பு விவசாயிகள்

தமிழக சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு 2,950 ரூபாய் விலை கிடைக்கும் எனவும் தெரிவித்தார். இதை தி.மு.க-வினர் பெரும் சாதனையாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்த அறிவிப்பு தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மத்தியில் ஆதங்கம் நிலவுகிறது.

கரும்பு விவசாயிகள்

கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் தமிழக வேளாண் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என முன்கூட்டியே தமிழக அரசு, விவசாயிகளிடம் கருத்துகள் கேட்டது. அப்போது பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, கரும்புக்கு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்கினால்தான், தங்களது உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தியிருந்தார்கள். இந்த பட்ஜெட்டில் கண்டிப்பாக ஓரளவுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். இந்நிலையில் கரும்புக்கு டன்னுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாங்கள் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால், கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது முதன்மைப்படுத்தப்படுத்தப்பட்டது. இதுபோன்ற இன்னும் சில முக்கியமான வாக்குறுதிகளை நம்பிதான் விவசாயிகள் திமுக-விற்கு வாக்களித்து ஆட்சி கட்டிலில் அமர்த்தினார்கள்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக, கரும்புக்கு டன்னுக்கு 4000 ரூபாய் அறிவிக்கப்படும் என உறுதியாக நம்பினார்கள். ஆனால், முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றம் அடைய வைத்தது. விவசாயிகள் தங்களது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பல வழிகளிலும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினார்கள். இந்நிலையில்தான் இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் கண்டிப்பாக, மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என நம்பினோம். ஆனால் தமிழக அரசு இந்த முறையும் ஏமாற்றிவிட்டது.

டன்னுக்கு 45 ரூபாய் மட்டுமே கூடுதலாக ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் 195 ரூபாய் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பதாக திமுக-வினர் சொல்லி வருகிறார்கள். யதார்த்த உண்மை என்பது, இந்த பட்ஜெட்டில் 45 ரூபாய் மட்டுமே உயத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் ஊக்கத்தொகையாக 150 அறிவிக்கப்பட்டது. அது ஏற்கனவே முடிந்துபோன அறிவிப்பு, ஆனால் அந்த தொகையையும் சேர்த்து, தற்போதைய பட்ஜெட்டில் 195 ரூபாய் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது போல் போலியான தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். தற்போது உயர்த்தப்பட்டுள்ள 45 ரூபாயையும் சேர்த்து கணக்கிட்டால், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு 2,950 ரூபாய் விலை கிடைக்கும்.

சுந்தர விமலநாதன்

திமுக, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் ஒரு புறமிருக்க, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் கரும்புக்கு மிகவும் குறைவான விலைதான் வழங்கப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியதாகும். அம்மாநிலங்களில் கரும்புக்கு டன்னுக்கு 3,500 ரூபாய் விலை வழங்கப்படுகிறது. இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர், `மத்திய அரசு புதிதாக கொண்டு வர முயற்சித்த வேளாண் சட்டங்கள் நடைமுறையில் இருந்தால், தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் தங்களது கரும்பை அம்மாநிலங்களுக்கு கொண்டு சென்று கூடுதல் லாபம் பார்த்திருக்க முடியும்’ என்ற தவறான தகவல் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இது சாத்தியமே இல்லை. இங்கிருந்து அம்மாநிலங்களுக்கு ஒரு லாரியில் 15 டன் கரும்பு கொண்டு செல்ல 50,000 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில் சராசரியாக கிடைக்கக்கூடிய 45 டன் கரும்பை அம்மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 1,50,000 ரூபாய் செலவாகும். இதுமட்டுமல்ல, இதில் இன்னும் பல சிக்கல்கள் உள்ளன. இதைப் பற்றி பேசுவதே அபத்தமானது.

ஆனால் அதே சமயம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டும் எப்படி டன்னுக்கு 3500 ரூபாய் கொடுக்க முடிகிறது என்பதை தமிழக அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும். அம்மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளில், சர்க்கரை உற்பத்தியை விடவும் எத்தனால் உற்பத்திக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு டன் கரும்பில் இருந்து 70 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய முடியும். லிட்டருக்கு 60 ரூபாய் வீதம் 4200 ரூபாய் விலை கிடைக்கும். எத்தனாலுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய தேவை உள்ளது. ஆனால் அதனை முழுமையாக நிறைவு செய்யும் வகையில் உற்பத்தி இல்லை. தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் எத்தனால் உற்பத்தி செய்தால், அதிகபட்சம் அடுத்த 15 நாள்களுக்குள்ளாகவே விற்பனை செய்துவிட முடியும். ஆனால் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி என்பது, தேவையை விடவும் அதிகமாக இருப்பதால், இதனை விற்பனை செய்ய பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

கரும்பு

எனவே தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளில், எத்தனால் உற்பத்திக்கான கட்டுமானங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்துகொடுக்கும் கரும்பில், 65 சதவீதத்தை எத்தனாலுக்கும், 35 சதவீதத்தை மட்டும் சர்க்கரை உற்பத்திக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனால் உற்பத்தியை ஊக்கப்படுத்தினால்தான், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த, வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். எத்தனால் உற்பத்தி செய்ய அதிகளவில் கரும்பு தேவைப்படும் எனவும், ஆனால் அந்தளவுக்கு இங்கு கரும்பு உற்பத்தி நடைபெறவில்லை எனவும் அரசு தரப்பில் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

டன்னுக்கு 4,000 ரூபாய் விலை வழங்கப்பட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் கரும்பு உற்பத்தி பரப்பு அதிகரிக்கும். லாபகரமான விலை கிடைக்காததால்தான், இங்கு கரும்பு சாகுபடி பரப்பு, மோசமாக குறைந்து கொண்டே வருகிறது. லாபகரமான விலை கிடைக்கவில்லையென்றால், தமிழகத்தில் கரும்பு சாகுபடியை பார்ப்பதென்பதே அரிதாகிவிடும்’’ என எச்சரித்தார்.

அரசு செவி சாய்க்குமா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.