பாகுபலி வெற்றி திரைப்படத்திற்கு பின் கொரோனா தொற்று காரணமாக நீண்ட இடைவெளிக்குப்பின் திரையில் வெளியான ராஜமவுலியின் RRR திரைப்படம், எமோஷனல், 3டி-யில் சுதந்திரப்போர் என பலவகைகளில் சிறப்பாக இருப்பதாக ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் வருகின்றன.
தென்னிந்திய திரைப்பட உலகில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டிய முதல் திரைப்படமாக இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி வரலாறு படைத்தது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி திரையிடப்பட்ட உலக நாடுகளிலெல்லாம் வசூலை வாரி குவித்தது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆந்திராவின் இரண்டு முன்னணி ஸ்டார் நடிகர்களான ராம்சரண், ஜுனியர் என்டிஆர் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த அஜய்தேவ்கன், அலியாபட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள RRR திரைப்படம் இன்று வெளியானது.
நெல்லை மாநகரில் ராம் முத்துராம் திரையரங்கில் காலை 5 மணி காட்சியாக முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் திரைப்படம் முடிந்ததும் வெளியே வந்து தங்களது கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர்.
3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது. மேலும் சுதந்திரப் போராட்டத்தின் உணர்வுள்ள போராட்ட களத்தை காட்டி இருப்பதும் சண்டைக்காட்சிகளில் அதிக மெனக்கெடல் இருப்பதும் வரலாற்று காலத்தை கண்முன் கொண்டுவந்து இருப்பதும் நல்ல முயற்சி என பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்தனர்.