புதுடெல்லி:
வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவதற்கு அமைப்புகள் அல்லது மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் பரிந்துரைகள் வந்துள்ளதா? வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டம் உள்ளதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவரும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பெறுவதற்கும், மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிக எண்ணிக்கையில் வெளியே வருவதற்கும், ஓட்டு போட்டதற்கான சான்றிதழை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ரிஜிஜு கூறினார்.
பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பதை ஊக்குவிக்க, தேர்தல் ஆணையம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 67 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.