இலங்கையின் இரண்டு முக்கிய செய்தித்தாள்கள் காகிதப் பற்றாக்குறையால் தங்கள் அச்சு பதிப்புகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இந்த முடிவெடுத்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, 1948ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஆங்கில மொழி நாளிதழான தி ஐலண்ட் மற்றும் சிங்களப் பதிப்பான திவயின ஆகியவை “நிலவும் காகிதப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு” ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்று கூறியது.
அத்துடன், முக்கிய தேசிய நாளிதழ்களும் கடந்த ஐந்து மாதங்களில் செலவுகள் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களாலும் பக்கங்களைக் குறைத்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது. பெப்ரவரியில் ஐந்தாவது தொடர்ச்சியான மாதாந்திர உயர்வான 17.5 சதவீத பணவீக்கத்துடன் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
வாகன சாரதிகள் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. கடந்த வாரத்தில் குறைந்தது நான்கு பேர் எரிபொருள் பெற்றுக்கொள்ள நீண்ட மணிநேரம் காத்திருந்த நிலையில் உயிரிழந்தனர்.
டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக 42 மில்லியன் டொலர்களை திரட்ட முடிந்ததாக எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் 2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்தபோது 7.5 பில்லியன் டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.3 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளன.
இந்த ஆண்டு இலங்கைக்கு அதன் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு சுமார் 7 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன. இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள நாணய நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து அதிக கடன்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.