உத்தரப் பிரதேச முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கும் நிலையில் அங்கு அதிர்ச்சிகரமான ஒரு
பாலியல் வன்புணர்வு
சம்பவம் நடந்துள்ளது.
முசாபர்நகர் மாவட்டத்தில் கணவரை மரத்தில் கட்டி வைத்து விட்டு, மனைவியை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 10 பேரை கைது செய்துள்ளனர். அதில், சிலர் சிறார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சியாகும்.
புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று இரவு தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் அந்தக் கணவர். அப்போது பத்து பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்துள்ளது.
தம்பதிகளை அருகில் உள்ள மாந்தோப்புக்கு அவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கணவரை மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் மனைவியை பத்து பேரில் நான்கு பேர் மட்டும் சரமாரியாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நியூ மண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் 10 பேரையும் கைது செய்துள்ளனர். அதில் 2 பேர் சிறார்கள் என்று மாவட்ட எஸ்பி அர்பித் விஜய்வர்ஜியா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. 2வது முறையாக முதல்வராக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். இதற்கான விழாவைப் பிரமாண்டமாக நடத்துகின்றனர். பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் விழாவுக்கு வருகின்றனர். இந்த நிலையில் உ.பியில் கணவரை மரத்தில் கட்டி வைத்து விட்டு மனைவியை 2 சிறார்கள் உள்ளிட்ட கும்பல் கேங் ரேப் செய்திருக்கும் செயல் பலரையும் அதிர வைத்துள்ளது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.