கூட்டுறவு சங்க இயக்குநர்களின் அதிகாரத்தை பறிப்பதா? திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் “மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்” என்பதற்காக, பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட “மாநில சுயாட்சி” என்ற முழக்கம், பின்னர் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என மாறி, இதனை அனைத்து பிராந்திய கட்சிகளும் ஆதரிக்கும் நிலை தற்போது இந்தியா முழுவதும் உருவாகியிருக்கிறது. இதற்குக் காரணம், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தான் மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை செவ்வனே பணியாற்ற முடியும் என்பதுதான்.  இந்த முறை மாநில அரசுகளுக்கு கீழேயுள்ள உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிலும் பின்பற்றப்பட வேண்டும்.  இதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எடுத்துக்காட்டு. ஆனால், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இதற்கு நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது.  இதிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. 
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள இயக்குநர்கள், தலைவர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.  அவர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்.  இவர்களின் பதவிக் காலத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக 2022 ஆம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றிய அரசு தி.மு.க. அரசு.  சட்டப்படி ஐந்தாண்டுகள் வகிக்க வேண்டிய பதவியை மூன்றாண்டுகளாக குறைப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது இல்லையா? ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா?  
மேற்படி சட்டத்திற்கான ஒப்புதல் பெறப்படாத சூழ்நிலையில், கூட்டுறவு சங்கத் தலைவர்களின் கையெழுத்து போடும் அதிகாரத்தினை குறைக்கும் வகையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களால் 22-03-2022 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலைகளில் சங்கத் தலைவரின் கையொப்பம் தனியாகவோ அல்லது சங்கச் செயலாளருடன் கூட்டாகவோ பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், சங்கத்தின் ஒழுங்குமுறை விதிகளில் சங்கத் தலைவரின் கூட்டுக் கையொப்பம் பெற வேண்டுமென்று வரையறுக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நீக்கறவு செய்ய வேண்டுமென்றும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கும் காசோலைகளில் சங்கச் செயலாளர் மற்றும் செயலாளருக்கு அடுத்த நிலையில் பணிபுரியும் பணியாளர் கூட்டாக கையொப்பமிட வேண்டுமென்றும், செயலாளரைத் தவிர வேறு பணியாளர் இல்லாத சங்கங்களைப் பொறுத்தவரையில், செயலாளரும், தலைமையிட நியாயவிலைக் கடை விற்பனையாளர் அல்லது இதர பணியாளர் இருப்பின் இருவரும் கையொப்பம் இடவேண்டும் என்றும், இதற்கென ஒழுங்குமுறை விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறும், சங்கத் தலைவர் கையொப்பமிட்டு காசோலை அனுப்பினால் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்றும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. 
கூட்டாட்சி தத்துவம் பற்றியும், ஜனநாயகம் குறித்தும் அண்மைக் காலமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக செயல்படுவது நியாயமா? தி.மு.க.வின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  
மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடும் தி.மு.க., தனக்கு கீழுள்ள கூட்டுறவு சங்க இயக்குநர்களின் அதிகாரங்களை பறிப்பதும், அவர்களின் பதவிக் காலத்தின் அளவைக் குறைப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  
எனவே, ஜனநாயகத்தை நிலை நாட்டும் வகையில், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர்களின் பதவிக் காலத்தை குறைப்பது மற்றும் அவர்களது அதிகாரத்தை பறிப்பது போன்ற முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். 
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.