திருவனந்தபுரம்:
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வரும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொச்சியில் உள்ள நெடும்பாச்சேரி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வளைகுடா நாட்டில் இருந்து வந்த விமான பயணிகளின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டது.
இதில் 3 பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகமாக இருந்ததை தொடர்ந்து அவர்களை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்களின் உடலில் 225 பவுன் தங்க பிஸ்கெட் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
சுங்க அதிகாரிகள் 3 பயணிகளிடமும் இருந்த 225 பவுன் தங்க பிஸ்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
தங்க பிஸ்கெட்டுகளை யாருக்காக கடத்தி வந்தனர்? இதற்கு முன்பும் இதுபோல தங்கம் கடத்தப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.