கோவா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. ஏற்கனவே, முதல்வராக இருந்த பிரமோத் சாவந்த் பாஜக சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வரும் 28-ம் தேதி அன்று கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், மார்ச் 29-ம் தேதி முதல் புதிய சட்டசபையின் இரண்டு நாள் கூட்டத்திற்கு கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அமர்வின்போது, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், கூட்டத்தின்போது வாக்கெடுப்பு மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவது உள்பட பல்வேறு சட்டசபை பணிகளை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக மூத்த சட்டசபை உறுப்பினரான கணேஷ் கவுன்கர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். முதல் நாளில் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான சட்டசபையின் முதல் முழு கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் தனது வழக்கமான உரையை மார்ச் 29-ம் தேதி ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை செயலாளர் நம்ரதா உல்மான் கூறுகையில், ” இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இருக்காது. சில கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்.. குடிபோதையில் தகராறு: அண்ணனை கழுத்தை நெரித்து கொன்று புதைத்த வாலிபர்