சன் டிவி சீரியல்களில் சிறந்தவற்றிற்கு வழங்கப்படும் ’சன் குடும்ப’ விருதுகள் வரும் மார்ச் 30ம் தேதி சென்னை தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடக்க இருக்கிறது. அநேகமாக தமிழ்ப் புத்தாண்டையொட்டி நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகுமெனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த விருதுகளுக்கான பிரிவில் ஃபேவரைட் ஹீரோவுக்கான விருதின் நாமினேஷன் பட்டியலில் கூட தன் பெயர் இல்லாததால் ’பூவே உனக்காக’ ஹீரோ அஸீம் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் சன் டிவியில்தான் தன் கரியரைத் துவக்கியவர் அஸீம். ‘பிரியமானவள்’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த அஸீம், பிறகு விஜய் டிவி பக்கம் போனார். அங்கு ‘பகல் நிலவு’ ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய சீரியல்கள் நடித்தார். பிறகு மீண்டும் சன் டிவிக்கு சில மாதங்களுக்கு முன்புதான் வந்தார். இவர் வந்த பிறகு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘பூவே உனக்காக’ தொடர் 10 மணிக்கு ஒளிப்பரப்பானது.
சில வாரங்கள் பத்து மணி ஸ்லாட்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியையே ரேட்டிங்கில் ’பூவே உனக்காக’ தொடர் முந்தியதும், அதனைச் சேனல் கொண்டாடியதும் கூட நடந்தது.
இதனால் இந்தாண்டு சன் குடும்ப விருதுகளில் சிறந்த ஹீரோவுக்கான விருது ரேஸில் தன் பெயரும் இருக்கும் என உறுதியாக நம்பினாராம்.
ஆனால், ’அன்பே வா’ வருண், ’சித்தி 2’ கவின், ‘கண்ணான கண்ணே’ யுவா, ‘கயல்’ எழில், ‘ரோஜா’ அர்ஜுன், ‘தாலாட்டு’ விஜய் என மொத்தம் 6 பேர் கொண்ட நாமினேஷன் பட்டியல் வெளியானதும் அவர் அதிர்ச்சி அடைந்ததாகச் சொல்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தினர்.
’’தொடர்ந்து ரெண்டு வருஷம் விஜய் டிவியில் சிறந்த நடிகருக்கான விருது வாங்கியவர் அவர். சன் டிவியில் அவர் வந்த பிறகே ‘பூவே உனக்காக’ தொடருக்கு நல்ல ரேட்டிங் கிடைச்சது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கினப்பக் கூட மறுபடி விஜய் டிவி அவரைக் கூப்பிட்டது. ஆனாலும் அவர் அங்க போகலை. ’பிக் பாஸ் அல்டிமேட்’டுக்கு கூப்பிட்டப்பவும் மறுத்துட்டார். இன்னும் சொல்லப் போனா ‘பூவே உனக்காக’ கதை, ஹீரோவுக்கு முக்கியத்துவம் தர்ற கதை. ஆனா ஹீரோவுக்கு அவ்வளவா முக்கியத்துவம் இல்லாத ‘கயல்’ சீரியல் ஹீரோ பெயரே நாமினேஷன் லிஸ்டுல இருக்கிறப்ப, தன் பெயர் நாமினெஷன்ல கூட இல்லாதது அவரை ரொம்பவே அதிர்ச்சியில தள்ளியிருக்கு.
இதைவிடப் பெரிய அதிர்ச்சி ‘பூவே உனக்காக’ தொடர் சிறந்த வில்லிக்கான (தேவிப்ரியா) ஒரேயொரு பிரிவுல மட்டும்தான் நாமினேஷன் பட்டியல்லயே இடம் பிடிச்சிருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கொண்டாடப்பட்ட சீரியல் இப்ப இந்த மாதிரி புறக்கணிக்கப் பட்ட பின்னணியில சேனலுக்குள் இருக்கும் சிலருடைய பாலிடிக்ஸ் இருக்குனு அவர் நம்புறார். அதனால ரொம்பவே மனம் நொந்து போய் இருக்கார்” என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
மொத்தத்தில் சன் டிவியில் தான் புறக்கணிக்கப்படுகிறோமோ என உணரத் தொடங்கியிருக்கும் அஸீம் மீண்டும் விஜய் டிவி பக்கம் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.