புதுச்சேரி: “நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, விடா முயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றுள்ளேன்” என்று புதுச்சேரி காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆட்டோர் ஒட்டுநர் கந்தன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
புதுச்சேரி ஜீவா நகரை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் கந்தன் (31). இவர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தார். இவர் ஐடிஐ படித்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இதனால் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. கடந்த 19-ம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் 2,627 பேர் தேர்வு எழுதினர். இதில் கந்தனும் கலந்துகொண்டார். இதற்காக ஆட்டோ ஓட்டிக்கொண்டே தனியாக பயிற்சி செய்து வந்துள்ளார். கடந்த 23-ம் தேதி அதிகாலையில் தேர்வு முடிவுகள் வெளியானது. கந்தனின் விடா முயற்சியால் தற்போது, காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து கந்தன் கூறியது, “ஐடிஐ முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் குடும்பச் சூழல் காரணமாக சில தனியார் நிறுவனங்களில் வேலை செய்தேன். அதில் போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இதனால் வாடகை ஆட்டோ ஒன்றை ஓட்ட தொடங்கினேன். ஆட்டோ ஓட்டிக்கொண்டே உடலை தகுதி செய்துகொண்டு, படித்து வந்தேன்.
ஏற்கெனவே இரண்டு முறை காவலர் தேர்வில் பங்கேற்றேன். ஆனால், ஒருமுறை உடல் தகுதி தேர்விலும், மற்றொரு முறை எழுத்து தேர்விலும் தோல்வியுற்றேன். அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வந்தவுடன் எப்படியாவது எனது கனவை நனவாக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக எப்போதும் ஆட்டோவின் பின்னால் புத்தகங்களை வைத்திருப்பேன். சவாரி இருக்கும்போது ஆட்டோ ஓட்டுவேன். சவாரி இல்லாதபோது படிப்பேன்.
நான் பல்வேறு இன்னல்கள், அவமானங்களை சந்தித்துள்ளேன். அதனையெல்லாம் கடந்துதான் என்றுடைய விடா முயற்சியால் இன்று காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். அரசும் நேர்மையான முறையில் தேர்வு நடத்தியதால்தான் என்னை போன்று கஷ்டப்படுவோர் இன்று தேர்ச்சி பெற்று வந்துள்ளோம். இதற்காக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பார்க்கக்கூடாது. அவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, விடாமல் முயற்சி செய்ய வேண்டும். நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என தன்னம்பிக்கையுடன் கந்தன் கூறினார்.
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.