புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில், ‛கடந்த 2020ல் சீனாவின் நடவடிக்கையின் விளைவாக சீர்குலைந்துள்ள இருநாட்டு உறவுகளை பற்றி ஆலோசத்ததாக’ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, திடீர் பயணமாக நேற்று (மார்ச் 24) இரவு டில்லி வந்தார். இன்று காலை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசிய அவர், அதனைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை தொடர்பாக ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது, திறந்த மனதுடன் நேர்மையான முறையில் உரையாற்றினோம். கடந்த 2020ல் சீனாவின் நடவடிக்கையின் விளைவாக சீர்குலைந்துள்ள இருநாட்டு உறவுகளை பற்றி ஆலோசத்தோம். மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தோம்.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்த வரையில், இந்தியாவின் கொள்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2593 மூலம் வழிநடத்தப்படுகிறது. உக்ரைனில், எங்களது அணுகுமுறைகள் பற்றி விவாதித்தோம். இருநாட்டு எல்லையில் 1993-96 ஒப்பந்தங்களை மீறி அதிக எண்ணிக்கையிலான துருப்புக்கள் இருப்பதால், சீனாவுடனான தற்போதைய உறவு சாதாரணமானதாக இல்லை. நீண்ட காலமாக அங்கு மிகப் பெரிய அளவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதும் தற்போதைய பிரச்னை.
கோவிட் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி சீனாவில் படிக்கும் இந்திய மாணவர்களை திரும்ப அனுமதிக்கப்படாத அவலநிலையை குறித்தும் பேச்சு நடத்தினோம். பல இளைஞர்களின் எதிர்காலத்தை உள்ளடக்கியதால், சீனா பாரபட்சமற்ற அணுகுமுறையை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்த விவகாரம் தொடர்பாக அவர் நாடு திரும்பியதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement