சென்னை: தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரிக்க உடந்தையாக இருந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை சிறை பிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க கோரி சிபிசிஐடி போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். புலன் விசாரணையில் உள்ள வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்க முடியாது எனக் கூறி சிபிசிஐடி டிஎஸ்பியின் மனுவை நிராகரித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, மூன்று பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி சிபிசிஐடி – டிஎஸ்பி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற விசாரணை முறை சட்டம் 73-வது பிரிவின் கீழ் புலன் விசாரணையில் உள்ள வழக்கிலும் பிடிவாரண்ட் பிறப்பிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, தலைமறைவாக உள்ள மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.