ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள அண்ணாநகரில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தொண்டி பகுதியிலிருக்கும் டாஸ்மாக் கடையைத் தூய்மைப் பணியாளர்கள் குடியிருந்து வரும் அண்ணா நகருக்கு இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக அங்குள்ள ஒரு வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவாடானை அண்ணா நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த அந்தப் பகுதி பொதுமக்கள், “எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை நிறுத்தக் கோரி இரண்டு முறை மனு அளித்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.
அப்போது திடீரென கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் ஆட்சியர் காலில் விழுந்து, “தயவுசெய்து எங்கள் பகுதிக்கு ஒயின்ஷாப் கொண்டுவராதீர்கள்” என்றபடி அழுதார். அதையடுத்து அதிகாரிகள் அந்தப் பெண்ணை உடனடியாக எழுப்பினர். இந்தச் சம்பவத்தால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணிடம் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். பின்னர், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.