சென்னை: கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.
நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன.
இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320 ஆக உயர்ந்து விட்டது. கேஸ் சிலிண்டர் விலை 4190 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சமையல் எரிவாயுவுக்கு பெரும் பற்றாக்குறையும் நிலவுகிறது.
இதனால் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. பேக்கரி மற்றும் இனிப்பங்களில் திண்பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உளுந்தவடை ஒன்றின் விலை 80 ரூபாயாக விற்பனைய செய்யப்படுகிறது.
அரிசி விலை 100, சீரகம் ஒரு கிலோ சீரகம் 1899, பெரும் சீரகம் ரூ. 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36,கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது.
ஒரு கிலோ பால் பவுடர் ரூ.1945-க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீ 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடைகளில் பால், டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இலங்கையில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியுள்ளதாவது:
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு என்னதான் நடக்கிறது இலங்கையில்?
இலங்கையின் பொருளாதார சூழல் மிக மோசமாகி விட்டது. மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட பணத்தை கொண்டு வந்து தான் உணவு சாப்பிடும் சூழல் உள்ளது. பெரும்பாலான மக்கள் காலைக்கும் மாலைக்கும் சேர்த்த இரவு ஒரு நாள் மட்டும் தான் சாப்பிடும் நிலை காணப்படுகிறது.
இதற்கு கரோனா மட்டுமே காரணமல்ல. போர் முடிந்த பின்னரும் படைகளுக்காக, ராணுவத்துக்காக அதிகமான தொகை செலவிடப்பட்டது. இதுமட்டுமின்றி பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியில் நடந்த பாண்டு ஊழல் போன்றவை தான் இதற்கு காரணம். மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தவர் மீது பெரும் ஊழல் புகார் உள்ளது. ஆனால் அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை இங்கு அழைத்து வந்து விசாரணை நடத்த எந்த நடவடிக்கையும் இல்லை.
சீன வங்கிகளிடம் இருந்து மிக அதிகமான வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ராணுவ அதிகாரிகளையே அனைத்து துறைகளிலும் நிர்வாகத்தில் உள்ளனர். இந்தியா போன்று இலங்கை சுயசார்பு பொருளாதாரம் இல்லை. கப்பல்கள் வந்து நிற்கின்றன. ஆனால் கொடுக்க பணம் இல்லை. அந்நியச் செலாவணி கையிருப்பது இல்லாததால் பல நாட்கள் கழித்தே பொருட்களை இறக்கும் சூழல் நிற்கிறது.
கேஸ் சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டி விட்டது. பால் பவுடருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. குழுந்தைகளுக்கு கூட பால் இல்லை. இந்தியா போன்ற அதிகமான மாடுகள் இலங்கையில் இல்லை. பால் பவுடர்கள் வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் அதிகமான விலை காரணமாக பால் பவுடர் வாங்க மக்களால் முடியவில்லை. பெரியவர்களும் கருப்பு காபி, கருப்பு தேனீர் தான் குடிக்கின்றனர்.
ரசாயன உரங்களுக்கு அதிபர் தடை விதித்தார். இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசி, காய்கறிகளின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பாதியளவு கூட மகசூல் இல்லை. இதனால் அரிசி மற்றும் காய்கிறகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுமட்டுமின்றி 12 மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அந்நியச் செலவாணி தட்டுப்பாடு காரணம் என்றால் அது உடனடியாக வந்திருக்காதே?
அந்நியச் செலவாணி தட்டுப்பாடு படிப்படியாக தான் வந்தள்ளது. ஒரே இரவில் நடந்திருக்காது. இலங்கை அரசு தொடர்ந்து செய்த தவறுகள் தான் இதற்கு காரணம். ஒரு குடும்ப தலைவருக்கு கூட தெரியும். சேமிப்பு குறைந்து கடன்கள் அதிகரித்தால் என்னாகும். இலங்கை அரசிலும் சில காலமாகவே இதுவே நடந்துள்ளது.
கரோனா காரணமாக சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்பட்டது மட்டும் இந்த நெருக்கடிக்கு காரணம் அல்ல. இது குறிப்பாக இலங்கை படைகளை வலிமையாக்க சீனாவிடம் கடன் வாங்கியது தான்
பாகிஸ்தான் அச்சுறுத்தலால் இந்தியா படைகளை வலிமையாக்குகிறது. ஆனால் இலங்கைக்கு என்ன தேவை இருக்கிறது. யார் எதிரிகள் உள்ளனர்? என்ன தேவை உள்ளது?
ஒரு குடும்ப தலைவர் கந்து வட்டி வாங்கினால் குடும்பமே தற்கொலை செய்யும் சூழலில் தான் முடியும் என்பது போல இலங்கை அரசின் நிலைமையும் உள்ளது.
சீனாவிடம் வாங்கிய கடன்களால் தான் இந்த பிரச்சினையா?
ஆம். சீனாவிடம் மிக அதிகமான வட்டிக்கு வாங்கிய கடன் தான் காரணம். இதற்கு பதிலாக இலங்கை அரசு இடங்களை எழுதிக் கொடுக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்க சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்புவில் செயற்கை தீவு அமைக்கப்பட்டு அங்கு சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. லிட்டில் சீனா ஆக அது உள்ளது. இங்கு எங்கும் சீன மொழி தான். தமிழ் மொழிக்கு கூட இவ்வளவு முக்கியத்துவம் இல்லை. சீன மொழி முக்கிய மொழியாக உள்ளது.
துறைமுகத்தில் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு தர நடவடிக்கை எடுத்தபோது அதையும் தொழிற்சங்கத்தை காரணம் காட்டி இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. பின்னர் வேறு வழியின்றி மேற்குமுனையம் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. திரிணகோணமேலை அம்பானி குழுமத்திற்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரிகோணமலையில் அரசு மருத்தவமனையை சீனா நிறுவனத்துக்கு இலங்கை அரசு விற்று விட்டது. இந்த பிரச்சினையில் இந்தியாவுக்கும் நெருக்கடி உள்ளது. பூகோள அரசியல் ரீதியாக இந்தியா இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும் தேவை உள்ளது. இதுமட்டும் போதாதது. வடகிழக்கு தமிழர்களை நிலைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இலங்கை அரசால் நாங்கள் அழித்தொழிக்கப்படுவதை விட இந்தியாவிடம் கேட்பதில் தவறில்லை. இந்தியாவின் வழிகாட்டுதலில் நாங்கள் நிம்மதி பெருமூச்சு விட வேண்டும்
பாதிப்பு கொழும்பில் மட்டுமா அல்லது வடகிழக்கு பகுதியிலும் உள்ளதா?
இலங்கையை பொறுத்தவரையில் சிங்களர்கள். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், வடகிழக்கு தமிழர்கள் என 4 பிரதான பிரிவினர் உள்ளனர். மலையக தொழிலாளர்களை பொறுத்தவரையில் அவர்களின் அன்றாட உணவான ரொட்டி கூட சாப்பிட முடியவில்லை. ரொட்டி தயாரிக்க பயன்படும் கோதுமை விலை கடுமையாக உயர்ந்து விட்டதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 10 அடிக்கு 10 அடி கட்டிடத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் அவர்கள் வாழும் அவநிலை உள்ளது. வட கிழக்கு மகாண மக்களின் நிலைமை இதை விடவும் மோசமாக உள்ளது.
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழர்கள் மீண்டும் புலம் பெயர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதே?
இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களை பொறுத்தவரை 10 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். 1 லட்சம் இந்தியாவில் அகதி முகாமில் உள்ளனர். 25 லட்சம் மக்கள் எப்போது போகலாம் என்று காத்திருக்கின்றனர். ஆனால் போவதற்கு படகிற்கு கூட பணம் இல்லை. ராணுவத்தின் அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் வாழ வழி முடியாத சூழலில் வேறு வழியின்றி சென்று விடாலாம் என்றே எண்ணுகின்றனர்.
அப்படியானல் இலங்கை பொருளாதார நெருக்கடி எப்போது தீரும்?
இலங்கையில் நிலவும் அந்நியச் செலவாணி பற்றாக்குறை என்பது எப்படி உடனடியாக தீரும். தேயிலை தோட்டம் மூலம் அந்நியச் செலவாணி வருமா. சுற்றுலா மேம்பட்டு உடனடியாக வருவாய் வந்து விடுமா. ஆடைகள் தயாரிப்புக்கு கூட ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. இந்தியா போன்று மற்ற நாடுகளும் டாலரில் இலங்கைக்கு கடன் கொடுக்குமா அப்படியானால் இந்த பிரச்சினை உடனடியாக எப்படி தீரும்.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்தால் தீர்வு கிடைக்குமா?
அதிபர் கோத்பய ராஜபக்சே ராணுவ அதிகாரியாக இருந்தவர். அதனால் அனைத்து துறைகளிலும் அதனால் பிரகடனப்படுத்தாத ராணுவ ஆட்சி நடத்தி வருகிறார். எதிர்க்கட்சிகள் பேராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையில்லை. மியான்மர் போன்றே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு செல்லும் அவலநிலை உள்ளது.
ஆர்எஸ்எஸ் சொல்லி தான், இந்திய அரசு இலங்கைக்கு நிதியுதவி செய்ததாக சொல்கிறார்கள். அது உண்மை என்றால் இந்து மதத்தில் ஒரு பிரிவு என கூறப்படும் இலங்கையில் உள்ள பவுத்த பீடாதிபதிகள் நன்றி தெரிவித்தார்களா இல்லையே. அவர்கள் இந்தியா மீது விஷத்தை கக்குகின்றனர். புத்தர் பெருமானும் இந்தியாவில் இருந்து தானே வந்தார். ஆனால் இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் இவர்கள் ஏன் விஷத்தை கக்க வேண்டும். இவர்களை பொருத்தவரையில் இனவெறி என்பதை விட்டுக் கொடுக்க மாட்டர்கள். சிங்கள பவுத்த பேரினவாதம் என்பதில் தான் உறுதியாக இருப்பார்கள்.
அப்படியானால் இலங்கை தமிழ் கட்சிகள் என்ன செய்யப்போகின்றன?
ஜெனிவா ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தொடர்ந்து முறையிடுவோம். ஜூன் மாதத்தில் அடுத்தக் கூட்டம் நடைபெறுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்வோம். அரசியல் தீர்வை நோக்கி செல்கிறோம். இதற்கு தமிழகமும், இந்தியாவும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும் என கோருகிறோம்.
இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
இந்திய அரசு இலங்கை மக்கள் மீது பரிதாபம் கொண்டு பணம் கொடுப்பதால் எந்த பயனும், தீர்வும் கிடைக்கப் போவதில்லை. பணம் கொடுக்கும் முன்பாக சில நிபந்தனைகளை வைத்து இலங்கை அரசை கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள். இதன் ஊடாக எங்கள் பிரச்சினைக்கும் தீர்வ காண முடியும்.
இந்தியா தற்போது குவாட் அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது. எனவே குவாட் அமைப்பிலும் கூட எங்கள் பிரச்சினையை கொண்டு செல்ல முடியும். இலங்கையின் வட பகுதியான மன்னார் வரை சீனா அதிகாரிகள் வந்து விட்டனர். அங்கிருந்து வேவு பார்க்கிறார்கள். ட்ரோன் மூலம் தகவல்களை பெற முயலுகின்றனர். இந்த நடவடிக்கை ஒருதொடக்கம் தான் என்று சீன அதிகாரி கூறுகிறார். எனவே இந்தியா இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இலங்கை விவகாரத்தல் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
இலங்கையில் விலைவாசி உயர்வால் கடும் நெருக்கடியை சந்திக்கும் இலங்கை மக்கள் வேறு வழியின்றி புரட்சியில் ஈடுபடும் சூழல் உள்ளதா?
இலங்கையில் மக்கள் புரட்சி செய்வதற்கான சூழல் இப்போது இல்லை. மக்கள் கிளர்தெழுந்தால் கூட ராணுவத்தை வலிமையாக வைத்துள்ளனர். அவர்களால் மக்கள் கிளர்ச்சியை அடக்குவார்கள். இலங்கையில் ஒரு குடும்பம் செய்யும் அட்டூழியத்தை மக்கள் சகிகக்காமல் போராட வந்தால் கூட இவர்களை பொறுத்தவரையில் புரட்சியை அடக்கி பழக்கப்பட்டவர்கள். எங்கள் இனத்தை அப்படி ஈவு இரக்கம் இல்லாமல் அழித்தொழித்தவர்கள்.
அதுமட்டுமல்லாமல் இலங்கையில் எதிர்க்கட்சிகளும் தற்போது ஒன்றுமையாக இல்லை. அதனால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் சூழல் இல்லை எனினும் மக்கள் போராட்டம் அதிகரித்தால் அப்படியொரு சூழல் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.