தஞ்சாவூர் | விவசாயி ஒப்புதலின்றி ரூ.1.5 லட்சம் பிடித்தம் செய்த வங்கி: மாவட்ட ஆட்சியர் தலையீட்டால் பிரச்சினைக்கு தீர்வு

தஞ்சாவூர்: தனது ஒப்புதல் இல்லாமல் வங்கி கணக்கிலிருந்து ரூ.1.5 லட்சத்தை பிடித்தம் செய்த வங்கி நிர்வாகத்திடமிருந்து பணத்தை பெற்றுத் தருமாறு விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் முன்பாக கண்ணீர் விட்டு கதறினார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தலையிட்டதால் வங்கி அதிகாரிகள் விவசாயின் வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணத்தை மீண்டும் வரவு வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்த, பூதலூர் வட்டம் செல்லப்பன்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஆர்.பன்னீர்செல்வம் (62) என்பவர், மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் விட்டு அழுது, கோரிக்கை மனுவை வழங்கினார். அப்போது, “நான் பூதலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு தொடங்கினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் பயிர் கடன் பெற்றேன். பின்னர் மகசூல் பாதிப்பு, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் தொடர்ந்து, பெற்ற கடன் தொகையை செலுத்த முடியவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் வங்கி நிர்வாகம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என வங்கியின் தரப்பில் கூறினர். பின்னர் சமரச மையத்தில் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் வங்கியினர் கூறியதால் நான் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதற்கிடையில் எனக்கு அரசு சார்பில் வந்த மானியங்களும் பூதலூர் வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.

இதையடுத்து நான் கள்ளபெரம்பூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் புதிதாக ஒரு கணக்கு துவங்கினேன். இந்நிலையில், கடந் தமாதம் நான் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்றேன். அப்போது கள்ளபெரம்பூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.1.65 லட்சத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அனுப்பினர்.
நான் உடனடியாக ரூ.60 ஆயிரம் பணத்தை எடுத்து நெல் அறுவடை செய்த கூலி, உரம் வாங்கியவற்றுக்கு கொடுத்தேன். இரு நாட்கள் கழித்து வங்கிக்கு சென்று மீதி பணம் எடுக்க முயன்றபோது, எனது கணக்கில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை எனவும், பூதலூர் இந்தியன் வங்கி கிளையை தொடர்பு கொள்ளவும் என கூறினர்.

நான் பூதலூர் வங்கி கிளைக்கு சென்றபோது என்னை அங்குள்ள மேலாளர் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். எனவே எனக்கு அந்த பணத்தை பெற்றுத்தர வேண்டும். நான் பூதலூர் வங்கி கிளைக்கு கட்ட வேண்டிய தொகையை தவணை முறையில் செலுத்த கால அவகாசம் வழங்க உதவிட வேண்டும்” என கூறி முறையிட்டார்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளரை தொடர்பு கொண்டு, விவசாயி பன்னீர்செல்வதுக்கு உதவிடுமாறு கூறினார்.

இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் அலுவலகத்துக்கு சென்ற பன்னீர்செல்வதுக்கு, வங்கி அதிகாரிகள் உதவி செய்தனர். அப்போது வங்கி கணக்கிலிருந்து பிடித்தம் செய்து கொண்ட ரூ.1.5 லட்சம் ரூபாயில் ரூ.25 ஆயிரத்தை மட்டும் தற்போது பிடித்து கொண்டு மீதமுள்ள தொகையை விவசாயி கணக்கில் சேர்த்துவிடுவதாகவும், மீதமுள்ள தொகையை வருங்காலங்களில் தவணை முறையில் விரைவில் செலுத்த வேண்டும் என வங்கியினர் கேட்டுக் கொண்டதை அடுத்து பன்னீர்செல்வம் மீண்டும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.