ஐரோப்பிய விமானங்கள் ரஷ்ய வான்பரப்பைத் தவிர்த்துச் சுற்றுப் பாதையில் செல்வதால் பயணத் தொலைவு, நேரம், எரிபொருள் செலவு ஆகியவற்றுடன், காற்றில் கலக்கும் புகை மாசும் அதிகரித்துள்ளது.
உக்ரைன் போரையடுத்து மேலை நாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததற்குப் பதிலடியாக ரஷ்யா தனது வான்பரப்பு வழியே செல்ல ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றின் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது. இதனால் லண்டன், ஹெல்சிங்கி, பிராங்க்பர்ட் நகரங்களில் இருந்து டோக்கியோ, சியோல் நகரங்களுக்கு விமானங்கள் ரஷ்யாவைச் சுற்றிச் செல்கின்றன.
டோக்கியோவில் இருந்து ரஷ்யா வழியே லண்டனுக்குச் செல்வதை விட, வட பசிபிக், அலாஸ்கா, கனடா, கிரீன்லாந்து ஆகியவற்றின் வழியாகச் செல்லக் கூடுதலாக இரண்டரை மணி நேரம் ஆகிறது.
சுற்றுப் பாதையில் செல்வதால் கூடுதலாக 21ஆயிரம் லிட்டர் எரிபொருள் செலவாகிறது. இதனால் எரிபொருள் செலவு 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் கூடுதலாக கார்பன் டை ஆக்சைடு காற்றில் கலப்பதாக அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.