“நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவரை கிடைக்கப்பெறவில்லை” என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ. ராசா பேசுகையில் “நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதா, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்துவிட்டதா? இவ்விவகாரத்தில் மத்திய அரசின் பதில் என்ன?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், “குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர்களால் அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM