தாலிக்குத் தங்கம் திட்டம்:
தமிழக அரசு சார்பில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டம் மிகவும் முதன்மையானது. இந்தத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்வதற்குத் தங்கமும் சேர்த்து தரப்படும். பெண்களின் கல்வித் தகுதியை வைத்து அவர்களுக்கான நிதி உதவி செய்யப்படும்.
இந்த திட்டத்தில் இரண்டு வகையான நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்று, பத்தாவது வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயம் தாலி செய்வதற்கு வழங்கப்படும். அதேபோல, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயம் தாலி செய்வதற்கு வழங்கப்படும். தங்க நாணயம் சம்பந்தப்பட்ட நபருக்கு நேரடியாகவும், உதவித்தொகை பணம் அவர்களின் வங்கிக் கணக்கிலும் வரவுவைக்கப்படும்.
அரசு அறிவிப்பு:
இந்த நிலையில், சட்டப்பேரவையில் 2022-23-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விகளில் சேரும் பெண் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும். இதனைச் சரி செய்ய `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிகளின் உயர்கல்வி இடைநிற்றல் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கும். ஏற்கெனவே அந்த மாணவிகள் மற்றக் கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும். இந்த திட்டத்தினால் ஆறு லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள் பயனடைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முதல்வர் விளக்கம்:
இந்த திட்டம் மாற்றப்பட்டது தொடர்பாகப் பேசிய தமிழக முதல்வர், “திருமண உதவித்தொகை திட்டத்தைக் கொண்டு வந்தது தி.மு.க அரசுதான். அந்த திட்டத்தை முதலில் நிறுத்தியது அ.தி.மு.க அரசு. பின்னாளில் அந்த திட்டத்தின் முதியத்துவத்தை உணர்ந்து உதவித்தொகையுடன் தங்கம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க கொண்டுவந்தது. தற்போது இந்த திட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்தபோது, 24.5 விழுக்காடு நபர்கள் மட்டுமே தகுதியுள்ள பயனாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்துப் பேசி திட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “உயர்கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவிகிதமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமாக இந்த தாலிக்குத் தங்கம் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்பாக கல்வி என்ற நிரந்தர சொத்தை மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம். தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் பயன்பெற்று வந்தார்கள். தற்போது, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலமாக ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள்” என்று விளக்கம் கூறினார்.
நிதியமைச்சர் விளக்கம்:
இது குறித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். “தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தங்கம் வழங்கப்படவில்லை. இதனால், 3,34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன” என்றார்.
மேலும், “நிலுவையில் உள்ளவர்களுக்குத் திட்டத்தின் பயன்களை வழங்க 3,000 கோடி ரூபாய் நிதி தேவை. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை மாநிலத் தணிக்கை துறை கண்டறிந்துள்ளது. நான்கு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த காரணத்தினால் மீண்டும் செயல்படுத்துவதில் பெரும் பிரச்னை உள்ளது. அதோடு, ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு மக்கள் மத்தியிலிருந்து கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணமாக இருந்து வருகின்றன.