துபாயில் சர்வதேச மந்திரிகள், தொழில் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை- தொழில் தொடங்க அழைப்பு

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அரசு முறை பயணமாக துபாய்க்கு புறப்பட்டு சென்றார்.

துபாயில் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் 4 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

துபாய் விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய துணைத் தூதர் அய்மன்பூரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். துபாயில் வசிக்கும் தமிழர்களும், தொழில் அதிபர்களும் முதல்- அமைச் சர் மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து துபாய் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சொகுசு வாகனம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் அந்த ஓட்டலில் தங்கினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு துபாய் சென்ட்ரல் பார்க் டவரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக சுமார் 60 பிரபல தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலைப்பு ஒதுக்கப்பட்டு இருந்தது.

பரபி பெட்ரோ கெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது அஸ்டர்-டிஎம்.ஹெல்த்கேர், முதன்மை செயல் அதிகாரி ஆசாத் முபீன், இமார் பிராப்பர்டீஸ் தலைமை செயல் அதிகாரி ஹதிபத்ரி, ‌ஷரப் குழுமத்தின் துணைத் தலைவர் ‌ஷராபுதீன் ‌ஷரப் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்கள் கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் இந்திய தொழில் குழுமங்களை சேர்ந்தவர்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

மேலும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர்.

இன்று பிற்பகல் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடந்து வரும் சர்வதேச கண்காட்சிக்கு செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கிறார். அந்த அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற இலச்சினை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அரங்கை திறந்து வைத்த பிறகு கண்காட்சியில் தமிழ்நாடு வாரக் கொண்டாட்டத்தையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ்வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்பட்டன.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

துபாய் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி செல்கிறார். அங்கு புலம் பெயர்ந்த தமிழர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காலித் அல் கியூபாசி, அபுதாபி வர்த்தக கழகத் தலைவர் அப்துல்லா முகமது, ஏடிகியூ நிறுவனத்தின் செயல் அதிகாரி முகமது அல் சுவைதி ஆகியோருடனும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

அங்கு 28-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்திய சமூகம் மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய உள்ளரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

விழா முடிந்ததும் 28-ந்தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவர், முதன் முதலாக செல்லும் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவருக்கு சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.