சென்னை:
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான்கு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். அங்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் மர்ரி, வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடு மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்களின் குழுவினையும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் துபாயில் நடந்து வரும் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற இலச்சினை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அரங்கை திறந்து வைத்த பிறகு கண்காட்சியில் தமிழ்நாடு வாரக் கொண்டாட்டத்தையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ்வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படுகின்றன.