சென்னை: தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாய் விமான நிலையத்தில் அவருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச கண்காட்சி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இது 6 மாதங்கள் நடத்தப்படும். தற்போது துபாயில் நடக்கும் கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் சர்வதேச கண்காட்சியாகும். கடந்த அக்.1-ம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி, மார்ச் 31-ம் தேதி நிறை வடைகிறது.
இதில் உள்ள தமிழக அரங்கில், மார்ச் 25 முதல் 31-ம் தேதி வரை ‘தமிழ்நாடு வாரம்’ அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகத்துக்கு எடுத்துக் காட்டும் விதமாக காட்சிப் படங்கள் தொடர்ச்சி யாக திரையிடப்படுகிறது.
இதுதவிர, தமிழகத்தில் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் சாதனங் கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மாதிரிகளும் இந்த அரங்கில் காட்சிப் படுத்தப்படுகின்றன.
கண்காட்சி அரங்கை திறந்து வைக்கவும், முதலீட்டாளர்களை சந்திக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானத்தில் சென்ற முதல்வர் ஸ்டாலினுடன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத் தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டவர்களும் சென்றனர்.
துபாய் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை இந்திய துணை தூதர் டாக்டர் அமன் புரி வரவேற்றார். ஏராளமான வெளிநாடுவாழ் தமிழர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி துபாய் நாட்டு அதிநவீன காரில் தங்கும் இடத்துக்கு முதல்வர் அழைத்துச் செல்லப்பட்டார்.
முதல்வர் தலைமையிலான குழுவினர், அபுதாபிக்கும் செல்கின்றனர்.
துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின்போது தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட அந்நாடுகளின் முக்கிய துறைகளின் அமைச்சர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். துபாயில் உள்ள முன்னணி வணிக, தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனும், வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். புலம்பெயர் தமிழர்களையும் சந்திக்கிறார்.