புதுடெல்லி: தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 1ம் தேதி கலந்துரையாட உள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வதற்கு முன்பாக ஏற்படும் மன பயம், அழுத்தத்தில் இருந்து விடுபடுவது தொடர்பாக, பிரதமர் மோடி அவர்களுடன் `பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் ஆண்டுதோறும் பேசி வருகிறார். இது, ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி முதல் முறையாக கடந்த 2018ம் ஆண்டு டெல்லியில் உள்ள டல்காடோரா மைதானத்தில் நடந்தது. இந்நிலையில், இதன் 5வது ஆண்டு நிகழ்ச்சி வரும் 1ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `மாணவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கலந்துரையாடல் வரும் 1ம் தேதி நடக்க உள்ளது. தேர்வு குறித்த பயம், மன அழுத்தத்தை போக்க, பிரதமர் மோடியின் அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதலை பெறுங்கள்,’’ என்று கூறியுள்ளார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு ஏப்ரல் 7ம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.