15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் நாளை சனிக்கிழமை (26 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மெகா ஏலத்திற்கு பிறகு நடைபெறும் தொடர் என்பதால் ரசிகர்கள் எல்லையில்லா ஆர்வத்தில் உள்ளனர். தற்போது இரு அணிகளின் பலம் பலவீனம் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
4 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய சிஎஸ்கே – அணியின் பலமும், பலவீனமும்
ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அணியின் நீண்ட கால கேப்டனாக இருந்த எம்.எஸ் தோனி தற்போது தனது பதவியை ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கி இருக்கிறார். எனினும் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிகிறது எனவே, தோனியுடன் இணைந்து ஜடேஜா அணியை சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கலாம்.
மெகா ஏலத்தில் மூத்த மற்றும் இளம் வீரர்களை வாங்கி குவித்த சென்னை அணி அவர்களை கச்சிதமாக பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அணியின் பேட்டிங் வரிசையில் சாம்பியன் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ மற்றும் தோனி போன்ற மேட்ச் வின்னர்கள் உள்ளனர். இவர்களுடன் புதிய வரவாக டெவான் கான்வேவும் இணைந்துள்ளார்.
ஆல்ரவுண்டர்களாக சிவம் துபே, கிறிஸ் ஜோர்டான், மிட்செல் சான்ட்னர் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். சுழலில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலியுடன் சேர்ந்து மிரட்ட மிட்செல் சான்ட்னர் மற்றும் இலங்கை ஆஃப் ஸ்பின்னர் மகேஷ் தீக்ஷனா போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள்.
One sleep away! All set! 💪#Yellove #WhistlePodu 🦁💛 pic.twitter.com/nVyY3gUZCe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2022
வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். அவர் அணியில் இடம்பிக்காதது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம். அவருக்கு பதில் அணி யாரை களமிறங்கும் என்கிற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் உள்ளது. இருப்பினும், வேகப்பந்துவீச்சுக்கு கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, நியூசிலாந்தின் ஆடம் மில்னே மற்றும் இந்திய இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் போன்ற வீரர்கள் உள்ளனர்.
சென்னை அணியின் அசைக்க முடியாத கேப்டனாக இருந்த தோனி தற்போது சாதாரண வீரராக களமிறங்க உள்ளார். அவர் கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரது தற்போதைய ஃபார்ம் குறித்து கவலை தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால், அதிலிருந்தும் தோனி மீளக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
2 முறை சாம்பியன் பட்டம்; கேகேஆர் அணியின் பலமும் பலவீனமும்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணி கடந்த சீசனில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியை தழுவியது. மெகா ஏலத்திற்கு பிறகு, புதிய கேப்டன், இளம் வீரர்கள் என உத்வேகத்துடன் உள்ளது.
மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ. 12.25 கோடிக்கு வாங்கி கொல்கத்தா அணி அவரையே அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 2020ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை திறம்பட வழிநடத்தி இருந்தார். அதே பாணியுடன் அவர் செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். தவிர, சமீப காலமாக அவர் வலுவான ஃபார்மிலும் உள்ளார். இது அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கான பேட்டிங் வரிசையில் வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா போன்ற அனுபவமுள்ள வீரர்கள் உள்ளனர். இதேபோல், சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் போன்ற தரமான ஆல்ரவுண்டர் வீரர்கள் உள்ளனர். வருண் சக்ரவர்த்தி கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் சுழலில் வித்தை காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
வேகத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி போன்ற பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
பலம் பொருந்திய அணியாக தென்படும் கொல்கத்தா அணியில் திறன்மிகுந்த இந்திய வீரர்கள் பற்றாக்குறை உள்ளது. இதேபோல் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்யும் முறையான வீரர்களை அந்த அணி வாங்கவில்லை. ஏலத்தின் கடைசி நேரத்தில் தான் சாம் பில்லிங்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை வாங்கி சேர்த்தது. அந்த அணிக்கு மற்றொரு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது ஆண்ட்ரே ரஸ்ஸலின் உடற்தகுதி தான். அவர் பீல்டிங் செய்ய டைவ் அடிக்கும் போது அவருக்கு பலமான காயம் ஏற்பட்டு விடுகிறது. இது அணியை முற்றிலும் பாதிக்கிறது. அவர் ஃபிட் ஆக இருக்கும் பட்சத்தில் அணி சமபலம் பெறும்.
The 𝙆𝙣𝙞𝙜𝙝𝙩𝙨 𝙞𝙣 𝙖𝙘𝙩𝙞𝙤𝙣 from last night’s practice match! 📸@ShreyasIyer15 @venkateshiyer @ShelJackson27 @rinkusingh235 #KKR #KKRHaiTaiyaar #কেকেআর #GalaxyOfKnights #IPL2022 pic.twitter.com/3d9qmk93Qa
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2022
மெகா ஏலத்திற்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதிய கேப்டன்களுடனும், சில புதுமுக வீரர்களுடனும் களம் காண உள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை அணி தொடரை வெற்றியுடன் துவங்கவே தீவிரம் காட்டும். அதற்கு முட்டுக்கட்டை போடவே கொல்கத்தா அணி முயற்சிக்கும். எனவே இவ்விரு அணிகள் மோதும் முதலாவது லீக் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்:
ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, என் ஜெகதீசன், ஹரிகேஷ்பதி, நிஷாந்த், சுப்ரான்ஷுபதி சௌத்ரி, சிமர்ஜீத் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிரிட்டோரியஸ், டெவோன் கான்வே, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்:
வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மவி, வருண் சக்ரவர்த்தி, சாம் பில்லிங்ஸ், அனுகுல் ராய், ரசிக் சலாம், அபிஜேத் சலாம். சிங், அமன் கான், ரமேஷ் குமார், அசோக் ஷர்மா, டிம் சவுத்தி, அலெக்ஸ் ஹேல்ஸ், முகமது நபி, உமேஷ் யாதவ், பி இந்திரஜித், சமிகா கருணாரத்னே.
இரு அணிகளின் உத்தேச லெவன் பின்வருமாறு;
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே):
- ருதுராஜ் கெய்க்வாட், 2. டெவோன் கான்வே, 3. அம்பதி ராயுடு, 4. ராபின் உத்தப்பா, 5. ரவீந்திர ஜடேஜா, 6. எம்எஸ் தோனி, 7. சிவம் துபே, 8. டுவைன் பிராவோ, 9. ஆடம் மில்னே, 10. கேஎம் ஆசிப், 11. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அல்லது துஷார் தேஷ்பாண்டே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்):
1.ஸ்ரேயாஸ் ஐயர், 2. வெங்கடேஷ் ஐயர், 3. அஜிங்க்யா ரஹானே, 4.நிதிஷ் ராணா, 5. சாம் பில்லிங்ஸ், 6. ஆண்ட்ரே ரசல், 7.சுனில் நரைன், 8.வருண் சக்ரவர்த்தி, 9.பாட் கம்மின்ஸ், 10.சிவம் மாவி, 11. உமேஷ் யாதவ்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“