“நம்பர் 1 என்ற நிலையை தமிழகம் அடைய ஐக்கிய அரபு அமீரக பயணம் உதவும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வெளிநாட்டு வர்த்தகத்திற்கான அமைச்சர் தானி பின் அகமது அல் சியோதி, பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், விவசாயம், உணவுப் பதப்படுத்துதல், மின் வாகனங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழலை எடுத்துக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். சந்திப்பின் போது, அமீரக அரசு சார்பில் மு.க. ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அதே போல், அமீரக அமைச்சர்களுக்கு ‘கருணாநிதி எ லைஃப்’ என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சந்திப்பை தொடர்ந்து ட்விட்டரில் முதலமைச்சர் வெளியிட்ட பதிவில், நம்பர் 1 என்ற நிலையை தமிழ்நாடு அடைய ஐக்கிய அமீரகப் பயணம் உதவும் என்ற நம்பிக்கை, அந்நாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் வலுப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM