மதுரை; ‘‘தனிப்பட்ட முறையில் என்னுடைய கல்வி நிறுவனங்களுக்காக 35 ஆண்டு காலமாக சொந்தமாகக் கட்டிடம் கட்டிய அனுபவம் இருக்கிறது. கையை வைத்தே ஒரு கட்டிடத்தின் தரத்தை கண்டுபிடித்துவிடுவேன். இதனால் நான் ஒப்பந்தர் என்று அர்த்தம் இல்லை’’ என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக் கட்டிட வளாகத்தில் ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் கட்டுமானப் பணிகளை இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எவ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமானப்பணிகளைப் பார்வையிட்ட பின், அமைச்சர் எ.வ.வேலு அளித்தப் பேட்டியில், ” ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பெயரில் கட்டப்படும் இந்த நூலகம் தரைத்தளத்துடன் 6 மாடி கட்டிடம். மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்படுகிறது. 12 மாதங்களில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டது. விரைந்து தரத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிற அளவிற்கு சிறப்பாக கட்டப்பட வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்தேன். கட்டிடத்திற்கான சிமெண்ட், கம்பி, தண்ணீர், மணல் பரிசோதித்து கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தேன்.
அதுமட்டுமில்லை, இதுபோன்ற கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் போடப்பட்டுள்ளதா? அவர்களுக்கான பாதுகாப்போடு கட்டிடம் கட்டப்படுகிறதா? அதிகாரிகள் கண்காணிப்பில் பணிகள் நடக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்தேன். பணிகளும், பதிவேடுகளும் சரியாக இருக்கின்றன.
கீழ்ப்பகுதி, தரைப்பகுதி, முதல் மாடி, இரண்டாவது மாடியில் தற்போது பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன. இன்னும் 3 தளங்கள் பணிகள் நடக்க வேண்டும். கீழே இருக்கிற தரைத்தளத்தில் நூலகத்தை பயன்படுத்துவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்படுகிறது.
முதல் தளத்தில் குழந்தைகள் பகுதி அமைகிறது. அவர்களுக்கான 20 ஆயிரம் புத்தகங்கள், தினசரி பத்திரிகைகள், மாதாந்திர பத்திரிகைகள், வாரப்பத்திரிகைகள் வைக்கப்படுகின்றன. இரண்டாவாது தளமான கலைஞர் பகுதியில் கலைஞரால் எழுதப்பட்ட 4 ஆயிரம் இலக்கிய, அரசியல், திரைப்படப் புத்தங்கள் இடம்பெறுகின்றன. அங்கு 186 இருக்கைகள் அமைகிறது.
தற்போது இளைஞர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ரயில்வே, குரூப் தேர்வுகளுக்கு தயாராகுவது அதிகரித்துள்ளது. அவர்களுக்கான 30 ஆயிரம் போட்டித் தேர்வு புத்தங்களும் அங்கு வைக்கப்படுகிறது. மூன்றாவது தளத்தில் 63 ஆயிரம் தமிழ் இலக்கியம் புத்தங்கள் வைக்கப்படுகின்றன. நான்காவது தளத்தில் ஆங்கிலப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.
இரு மொழிக் கொள்கை அடிப்படையில் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக 63 ஆயிரம் ஆங்கிலப் புத்தகங்கள் இந்த தளத்தில் வைக்கப்படுகின்றன. இந்தத் தளத்தில் 224 இருக்கைகள் இருக்கும்.
5வது தளம் அரிய வகை புத்தகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இங்கு ஐம்பெரும் காம்பியங்கள், உள்ளிட்ட அரிய 12 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படுகிறது.
6வது தளம், பார்வையற்றோருக்கான சிறப்பு டிஜிட்டல் தளமாக அமைகிறது. இங்குதான் நூலகத்தை நிர்வகிக்கிற, கண்காணிக்க நூலகர், துணை நூலகர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி அறை ஒதுக்கப்படுகிறது.
கலைஞர் சிலையும் இந்த நூலக வளாகத்தில் அமைக்கப்படுகிறது. மேலும், நகரும் படிக்கட்டுகள், தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, குளிர்சாதன அறைகள், ஜெனரேட்டர், யூபிஎஸ் உள்ளிட்டவை அமைந்த முழுமையான டிஜிட்டல் நூலகமாக அமைகிறது.
தலைநகரில் அன்றைய முதலமைச்சர் அண்ணா நூற்றறாண்டு என்ற சிறப்பான நூலகம் அமைத்தார். இன்றைய முதல்வர் ஸ்டாலின் பலரும் பாராட்டுகிற, பயன்படுத்தும் வகையில் இளைஞர்கள் எதிர்காலத்தில் அரசுப்பணிக்கு செல்கிற வகையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கிறார்.
வரும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 31ம் தேதிக்குள் கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் பாராட்டுகிற அளவிற்கு இந்த நூலகம் சிறப்பாக கட்டி முடிக்கப்படும். எனக்கும் தனிப்பட்ட முறையில் 35 ஆண்டு காலமாக சொந்தமாக கட்டிடம் கட்டும் அனுபவம் இருக்கிறது. இப்படி சொல்வதால் ஒப்பந்ததாரர் என்று போட்டு விடாதீர்கள். நான் ஒப்பந்தாரரெல்லாம் கிடையாது. எனக்குச் சொந்தமாக கல்வி நிறுவனங்களுக்காக நானே முன்னின்று கட்டிடங்களைக் கட்டிய பழக்கம் உள்ளது.
அதனால், சிறிய தவறு என்றால் கூட அது என் கண்ணுக்கு முதலில் தெரிந்துவிடும். கையை வைத்துப் பார்த்தே ஒரு கட்டிடத்தின் தரத்தை கண்டுபிடிக்கக்கூடிய அனுபவமும் எனக்கு இருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் நான் பாராட்டுகிற அளவிற்கு இந்தக் கட்டிடம் கட்டப்படுகிறது” என்றார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பெரிய கருப்பன், எம்எல்ஏ.,க்கள் தளபதி, தமிழரசி, ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.