சென்னை தாம்பரத்தை அடுத்த நாவலூர் அரசுக் குடியிருப்பில் மொத்தம் 2,040 வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நாவலூர் செரபணஞ்சேரி பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டுக்குள் வரும் இந்த குடியிருப்பில் சென்னை எம்.ஜி.ஆர் காலனி, அரும்பாக்கம், பாடிக்குப்பம், அண்ணா நகர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் வசித்து வந்த மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுக் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். சென்னைக்கு வெளியே நாவலூர் குடியிருப்பு இருப்பதால் இங்கு வசிக்கும் மக்கள் பெரியளவில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய நாவலூர் குடியிருப்பைச் சேர்ந்த பரிமளா, “நாங்க அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, எங்க இடத்துல இருக்கும்போது நாலு வீட்டில், வீட்டு வேலை செய்தாவது வருமானம் ஈட்டிட்டு இருந்தோம். இப்போ இங்க நாவலூர்’ல எங்களுக்குச் சரியான வேலை இல்ல. ஐம்பது வயசுக்கு மேல உள்ளவங்கள இங்க யாரும் வேலைக்கு எடுக்கமாட்றாங்க. அதேமாதிரி இங்க நாங்க எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாம தவிச்சுட்டு இருக்கோம். இங்க, எங்க குடியிருப்பு பகுதிக்கு ஆரம்பச் சுகாதார நிலையம் இருக்கு. ஆனா, அது இருந்தும் எந்த பயனுமில்லாம பூட்டியே கிடக்கு… மருத்துவமனை இல்லாததால இங்கிருந்து படப்பைக்கும், செரப்பணஞ்சேரிக்கும் அலைய வேண்டியதா இருக்கு. இரண்டுமே ரொம்ப தூரம். ஏதாவது அவசரம்’னு ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணா கூட வர ரெண்டு மணி நேரம் ஆகுது.
தெருவும் ரொம்ப மோசமா இருக்கு. சாலைகள்’ல மறுபடியும் தார் போடணும். ஆனா, இன்னும் போடல. வீடுகள் எல்லாம் சிதிலமடஞ்சு கிடக்கு. எப்ப வீடு இடியுமோனு பயமாயிருக்கு. கழிவுநீர் பைப்’ல இருந்து கழிவுநீர் வழிந்து இங்க சுகாதார சீர்கேடு நிலவுது.
இங்க எங்களுக்குக் குடிக்கக் கூட தண்ணி இல்ல. வெளியில கேன் வாட்டர் வாங்கித் தான் குடிச்சிட்டு இருக்குறோம். குளிக்கிறதுக்கும், மத்த பயன்பாடுகளுக்கும் போர் தண்ணிய தான் பயன்படுத்திட்டு வர்றோம். போர் தண்ணியும் இங்க ரொம்ப மோசமா இருக்கு.
புள்ளைங்க வெளியில படிக்க போகணும்’னா ரொம்ப நேரம் பயணிக்கணும். சென்னை தாம்பரத்திற்குப் பேருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும். அதுவே கோயம்பேட்டுக்கு விடியற்காலை காலையில் ஒரே ஒரு பேருந்து அவ்வளவுதான். அடிக்கடி பேருந்து வந்தால் நல்லா இருக்கும். இங்குச் சென்னை எம்.ஜி.ஆர் காலனி, அரும்பாக்கம், பாடிகுப்பம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே வீடு அலாட் செஞ்சுருக்காங்க. மத்தவங்களுக்கு டோக்கன் மட்டும்தான் கொடுத்திருக்காங்க. டோக்கன் மட்டும் உள்ளவங்களுக்கு வீடு நிரந்தரமில்ல. எல்லாருக்கும் வீடு அலாட் பண்ணனும்’னு வலியுறுத்தியும், வேலைவாய்ப்பு போன்ற பல கோரிக்கைகள் முன்வைத்தும் எம்.எல்.ஏ, தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு மனு கொடுத்திருந்தோம். அதுல ஒரு சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே இருக்கு. அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றத் தொடர்ந்து வலியுறுத்தி மனு அனுப்பிட்டு இருக்கேன்” என்றார் ஆதங்கமாக.
குடியிருப்பு மக்களின் குறைகள் குறித்து, செரப்பணஞ்சேரி பஞ்சாயத்துத் தலைவர் சீனிவாசனிடம் பேசினோம். “நாவலர் குடியிருப்பானது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வீடு சரி இல்லை என்பதற்கும் ரோடு சரி இல்லை என்பதற்கும் நாங்கள் (பஞ்சாயத்து) பொறுப்பேற்க முடியாது. ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மனு அளித்திருக்கிறோம். எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. குடியிருப்பு மக்களுக்குத் தண்ணீர் பெற்றுத் தரும் வகையில், கிணறு வெட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது” என்றார்.
சென்னையின் பிரதான பகுதிகளிலிருந்து நாவாலுரில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களுக்கு, குடிநீர், மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டியது அரசு இயந்திரத்தின் முதன்மை பணி… நாவலூர் அரசுக் குடியிருப்பின் நிலைமை மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!