சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஓர் கட்டணமில்லா இடம் ஒதுக்கப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரும் கல்வியாண்டு முதல் அதாவது 2022-2023-ம் கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகமானது 2010-ம் ஆண்டு முதல் இலவசக் கல்வித்திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் இணைந்து படிக்க முடிகிறது. அந்த வகையில் 2021-2022-ம் கல்வியாண்டில் மட்டும் 340 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டிலிருந்து திருநங்கைகளுக்கு இடம் வழங்குவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாகப் பேசியுள்ள துணைவேந்தர் கௌரி, “மாற்றுப்பாலினத்தவர் உயர் கல்வியில் சேரும் வாய்ப்பை உறுதிசெய்யும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே இந்தக் கல்வியாண்டில் முதுநிலை கல்வி கற்கும் மாற்றுப் பாலினத்தவரின் கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 131 கல்லூரிகளிலும் மாற்றுப் பாலினத்தவருக்கென்று ஓரிடம் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தொடர்பாக சமூகச் செயற்பாட்டாளரும் திருநர் உரிமை கூட்டு இயக்கத்தைச் சேர்ந்தவருமான கிரேஸ் பானுவிடம் பேசினோம். “இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதுதான். 2014-ல் யூ .ஜி. சி இதற்கான முயற்சியில் ஈடுபட்டது . கல்வி, உதவித்தொகை போன்றவற்றில் பல்கலைக்கழகம் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் ஏஞ்சல் கிளாடி என்கிற திருநங்கை படித்தார். சில வருடங்களுக்கு முன்பு , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநர்களுக்கு இலவச கல்வி மற்றும் 1% இட ஒதுக்கீடும் அறிவித்தது. இதுபோல் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் முன்வருவது மகிழ்ச்சி அளித்தாலும், திருநர் கல்வி தொடர்பாக அரசு ஒரு கொள்கை முடிவெடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இலவச கல்வியுடன் பொருளாதார உதவியும் தேவை. பல திருநர்கள் வீட்டைவிட்டு துரத்தப்பட்டு ஆதரவில்லாமல் இருக்கிறார்கள். திருநர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கவேண்டும் என்ற சாராம்சம் யூ .ஜி .சி உத்தரவில் இருக்கிறது.
கல்வி , வேலைவாய்ப்பு போன்றவற்றில் திருநர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் எங்கள் நீண்டநாள் கோரிக்கை. கர்நாடகம், பீகார் அரசுகள் திருநர்களுக்கு இடஒதுக்கீடு அறிவித்துள்ளன. முற்போக்கு மாநிலம் என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு அரசு இதைப்பற்றி முடிவெடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இந்தியாவிலேயே பொதுத் தளத்தில் பங்கேற்கும் திருநர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். திருநர்கள் படிப்பில் அதிக ஆர்வம்காட்டி வருகிறார்கள். TNPSC தேர்வுக்கு 100-க்கும் மேற்பட்ட திருநர்கள் தயாராகவும் விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.
கேரள, கர்நாடக அரசு திருநர்களுக்கான கொள்கையை (Transgender Policy) அறிமுகப்படுத்தி இருக்கிறது . தமிழ்நாட்டில் திருநர்களுக்கு என்று ஒரு தனிக் கொள்கை இல்லை. அதனால் உரிமை சார்ந்த விஷயங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் கோர்ட்டில் முறையிட்டுப் பெற வேண்டிய நிலைதான் இருக்கிறது.
கல்வி என்னும் ஆயுதத்தைப் பெற்ற திருநர்கள் படிப்படியாக முன்னேறி வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே , இலவச கல்வியுடன் சேர்த்து இட ஒதுக்கீடு, உதவித்தொகை, உரிமை சார்ந்த விஷயங்களில் தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் பிச்சை, பாலியல் தொழில் என்று அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் என் சமூகம் உயர்ந்த நிலைக்கு வர முடியும்” என்றார்.