இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்), அவாமி தேசிய கட்சி, ஜாமியத் உல்மா இ இஸ்லாம் கட்சி (மவுலானா பஸ்லுர் ரகுமான் அணி) ஆகிய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அவை இம்ரான்கான் அரசு மீது அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்துள்ளன.
இம்ரான்கான் அரசை கவிழ்த்து விடுவதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 28-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இது இம்ரான்கான் அரசுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. இதற்கு ஒரு நாள் முன்னதாக 27-ந் தேதி இஸ்லாமாபாத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை இம்ரான்கான் நடத்த உள்ளார்.
இந்த நிலையில் இம்ரான்கான் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நன்மைக்கு ஆதரவாகவும், தீமைக்கு எதிராகவும் முஸ்லிம்கள் நிற்க வேண்டும்” என்று அவர் குரானை மேற்கோள்காட்டி கூறி உள்ளார்.
மேலும், 27-ந் தேதி நடக்க உள்ள கூட்டத்துக்கு அவர் அழைப்பும் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் குறிப்பிடும்போது, “நான் தீயவர்களுடன் இல்லை. அதற்கு எதிராக இருக்கிறோம் என்ற செய்தியை விடுப்பதற்கு 27-ந் தேதியன்று மக்கள் என்னுடன் சேர வேண்டும். கொள்ளையடித்த பணத்தில் மக்கள் பிரதிநிதிகள் வாங்கப்படுகிறார்கள். பாகிஸ்தானையும், ஜனநாயகத்தையும் சேதப்படுத்தும் முயற்சியில் இனி மேல் யாரும் குதிரை பேரத்தில் ஈடுபட முடியாது என்பதை நாடு அறிய வேண்டும்” என்று கூறி உள்ளார்.
இதற்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரசீத் அகமது, இஸ்லாமாபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆளும் கட்சி எம்.பி.க்கள் கட்சி தாவ வேண்டியதில்லை. அது அவர்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது. நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்பதை கட்சிமாறிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
கட்சி மாறினால் மரியாதை கிடைக்கும் என்று நினைப்பவர்கள் தவறு செய்கிறார்கள். இந்த கட்டத்தில் நாட்டுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
கூட்டாளிகள் பொதுவாக முடிவுகளை எடுப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றனர். உண்மையுள்ளவர்கள் ஜனநாயகம் மற்றும் அவர்களுடைய கட்சியுடன் அப்படியே இருக்கிறார்கள்.
இது அவர்களின் தார்மீக, அரசியலமைப்பு மற்றும் இஸ்லாமிய பொறுப்பு என்பதால் எதிர்க்கட்சி முகாமில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில் பாகிஸ்தானில் திடீர் தேர்தல் வரலாம் என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரசீத் அகமது கூறி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.