புதுடெல்லி: பாகிஸ்தானுக்குள் தவறுதலாக ஏவுகணை பாய்ந்த விவகாரத்தில் விமானப்படை குரூப் கேப்டன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளின் பராமரிப்புப் பணி கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது தவறுதலாக சீறிப் பாய்ந்த ஒரு ஏவுகணை, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரில் விழுந்தது. பராமரிப்பு பணியின்போது அந்த ஏவுகணை எதிர்பாராதவிதமாக பாய்ந்ததாகவும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இருதரப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த சம்பவம் மனிதர்களின் கவனக்குறைவால் நடந்ததா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்ததா என்பது குறித்து இக்குழு தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த குரூப் கேப்டன் உள்ளிட்ட அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் பராமரிப்புப் பணிகளின் நடைமுறைகள் குறித்தும் இக்குழு விரிவாக ஆய்வு செய்து வருகிறது.