பார்லி.யில் கதறி அழுத பாஜக பெண் எம்பி – காரணம் இது தான்!

மேற்கு வங்க மாநிலத்தில், சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ரூபா கங்குலி வலியுறுத்தி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்கை மாநில போலீசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வழக்கின் போக்கு குறித்து ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி அன்று அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில பாஜக எம்பி ரூபா கங்குலி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்கிறோம். வங்காளத்தை விட்டு தினமும் மக்கள் வெளியேறுகிறார்கள். அவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். பிர்பும் சம்பவத்தில் இறந்தவர்கள் முதலில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது கை, கால்களை உடைத்து ஒரு அறைக்குள் பூட்டி வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபையை வலியுறுத்துகிறேன். மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்திஉ.பி., முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.