காந்திநகர்: சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்காக பணியாற்ற வேண்டும். சுதந்திர தின நூற்றாண்டு விழாவை பொற்காலமாக மாற்ற வேண்டும் என்று குஜராத் சட்டமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்’ என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதல் முறையாக குஜராத் சட்டமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேல் போன்ற குஜராத் மாநிலத்தை சேர்ந்த மக்கள் மற்றும் தலைவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. கடந்த சில ஆண்டுகளாக குஜராத் மாடல் வளர்ச்சி என்பது சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது. நமது நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்காக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பது கடமையாகும். 2047ம் ஆண்டு சுதந்திர நூற்றாண்டு விழாவை நாடு கொண்டாடும்போது அந்த காலத்தில் உள்ள தலைமுறை நாட்டை பற்றி பெருமிதம் கொள்வார்கள். இந்தியாவின் நூற்றாண்டு விழாவை பொற்காலமாக மாற்றும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து வளர்ச்சி பாதையில் தொடர்ந்து முன்னேறுவார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.