பாட்னா: பிஹார் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. முதல்வராக நிதிஷ்குமார் பதவி வகிக்கிறார். 74 இடங்களுடன் பாஜக. இருந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்ற விகாஷீல் இன்சான் கட்சியில் (விஐபி) 3 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சஹானி மாநில அமைச்சராக இருக்கிறார்.
இந்நிலையில், விஐபி கட்சியின் ராஜு குமார் சிங், மிஸ்ரி லால் யாதவ், ஸ்வர்ண சிங் ஆகிய 3 எம்எல்.ஏ.க்களும் திடீரென நேற்றுமுன்தினம் கட்சியில் இருந்து விலகி பாஜக.வில் இணைந்தனர். இவர்கள் மூவரும் விதான் சபாவில் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹாவை சந்தித்து, பாஜக.வுக்கு ஆதரவு அளிப்பதற்கான கடிதத்தை கொடுத்தனர். பின்னர் புதன்கிழமை இரவு அந்த 3 எம்எல்ஏ.க்களையும் பிஹார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் பாஜக அலுவலகத்தில் வரவேற்றனர்.
இதுகுறித்து சபாநாயகர் சின்ஹா கூறும்போது, ‘‘தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது’’ என்று தெரிவித்தார். விஐபி கட்சி எம்எல்ஏ.க்கள் தற்போது பாஜக.வில் இணைந்ததால் பாஜக.வின் பலம் சட்டப்பேரவையில் 77 ஆக உயர்ந்துள்ளது. எனினும், ஏற்கெனவே அந்தக் கட்சி என்டிஏ கூட்டணியில் இருந்ததால் எம்எல்ஏ.க்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், 77 இடங்களுடன் பாஜக தற்போது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
– பிடிஐ