பேடிஎம் பங்கில் போட்ட பணமாவது திரும்ப கிடைக்குமா? இப்பங்கின் விலை மீண்டும் ஏற்றம் காணுமா? கையில் இருக்கும் பங்கினை அப்படியே வைத்திருக்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்ற குழப்பம் முதலீட்டாளார்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகின்றது.
ஏனெனில் ஏற்கனவே பங்கு வெளியீட்டு விலையில் இருந்து 70% மேலாக சரிவில் காணப்படுகின்றது.
மிகப்பெரிய அளவில் நஷ்டத்தினை கண்டுள்ள முதலீட்டாளார்கள், இனியேனும் இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணுமா? என்று காத்துக் கொண்டுள்ளனர்.
போட்ட பணமாவது மிஞ்சுமா.. பேடிஎம் முதலீட்டாளர்களுக்கு பெருத்த அடி..!

ரூ.1 லட்சம் கோடி காலி
தொடர்ந்து இப்பங்கின் விலையானது சரிந்து வரும் நிலையில், அதன் சந்தை மதிப்பும் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. ஆரம்பத்தில் 1.39 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட ஒரு நிறுவனமாக செபியால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இன்று அதன் மதிப்பு வெறும் 35,273 கோடி ரூபாயாகும். 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.

முக்கால்வாசி முதலீடு போச்சு
சொல்லப்போனால் இந்த பங்கினில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் முக்கால்வாசி பணத்தினை ஏற்கனவே இழந்து விட்டனர். இருக்கும் கால்வாசி பணமாவது மிஞ்சுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் பேடிஎம்மில் இந்த வீழ்ச்சி குறித்து செபி விளக்கம் கேட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் நலன் கருதி சமீபத்திய தகவல்களை தெரிவிக்கும்படியும் விளக்கம் கேட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தடையும் ஒரு காரணம்
இந்த நிறுவனத்தின் பங்கு விலை சரிவுக்கு பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளார்களுக்கு தடை விதித்தது. பேடிஎம் நிறுவனத்தின், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் இதர தரவுகளைத் தனது சீன முதலீட்டு நிறுவனத்திற்குப் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுவும் பெரும் சரிவுக்கு காரணமாக அமைந்தது.

இலக்கு விலை குறைப்பும் காரணம்
இதற்கிடையில் தொடர்ந்து ஏற்கனவே சரிவினைக் கண்டு வந்த பேடிஎம் பங்கின் இலக்கினை, குறைந்து பல்வேறு தரகு நிறுவனங்களும் அறிவிப்புகளை வெளியிட்டன. இதன் காரணமாகவும் இப்பங்கின் விலையானது சரிவினைக் கண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோலட் கேப்பிட்டல் என்ன சொல்கிறது?
டோலட் கேப்பிட்டல் நிறுவனம் பேடிஎம்மின் இலக்கு விலையை 1620 ரூபாய் என்ற லெவலுக்கு நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய லெவலான 566 ரூபாய் என்ற லெவலில் இருந்து நிர்ணயம் செய்துள்ளது. இது மேலாக 185% மேலாக அதிகரிக்கலாம் என்றும் கணித்துள்ளது. நிறுவனத்தின் வெளியீட்டு விலையான 2150 ரூபாயில் இருந்து 74% குறைந்துள்ளது. இது கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அதன் ஆல் டைம் லோவான 520 ரூபாயினை தொட்டது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்
பேடிஎம் தற்போது இரு பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. தற்போதைக்கு புதிய வாடிக்கையாளார்களை சேர்க்க முடியாத நிலை, இரண்டாவது அதிக மதிப்பீடு செய்யப்பட்டதே இதன் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாகவும் உள்ளது. ஆக இந்த இருபெரும் பிரச்சனைக்களை தீர்க்கும் வரையில் இப்பங்கில் தாக்கம் இருக்கலாம். எனினும் இதன் மாதாந்திர வருவாய் விகிதம் வலுவாக உள்ளது. ஆக இதனால் பெரிய கவலை இல்லை என்றும் டோலட் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.

பொறுத்திருந்து வாங்கலாம்
மற்றொரு ஈக்விட்டி நிறுவனமான Proficient Equities-ன் நிறுவனர் மனோஜ் டால்மியா, பேடிஎம்மின் பங்கு விலையானது 425 ரூபாய் வரையில் வீழ்ச்சி காணலாம். இது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தலாம். ஆக 800 ரூபாய்க்கு மேலாக செல்லும்போது வாங்கலாம். இது காலாண்டில் நல்ல வளர்ச்சி, சரியான வணிக வழிகாட்டுதல்கள் என பல சாதகமான காரணிகளே விலையை உயர்த்த காரணமாக அமையும். ஆக அப்போது வாங்கலாம் என கூறியுள்ளார். மொத்தத்தில் பொறுத்திருந்து வாங்குவது நல்லது என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் காலாண்டு நிலவரம்
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர நஷ்டம் 778.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 535.5 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் வருவாய் விகிதம் முந்தைய ஆண்டினை காட்டிலும் 88% அதிகரித்து 772 கோடி ரூபாயில் இருந்து 1456.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேக்வாரி ரிசர்ச் கணிப்பு
சர்வதேச ஆய்வு நிறுவனமான மேக்வாரி ரிசர்ச் நிறுவனமும் பேடிஎம் பங்கின் இலக்கு விலையை 450 ரூபாயாக குறைத்துள்ளது. இந்த நிறுவனம் வங்கி உரிமம் பெறுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இப்பங்கின் இலக்கு விலையை குறைத்துள்ளது.

கவலையளிக்க்கும் விஷயம்
எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டாளர்களுக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் பேடிஎம் பங்கானது கூடுதல் கண்காணிப்பு மெக்கானிசம் (ASM)ன் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இது பங்கு விலையில் ஏற்படும் தீவிர ஏற்ற இறக்கத்திலிருந்து சில்லறை முதலீட்டாளர்களைப் பாதுகாக்க பரிவர்த்தனைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டமைப்பாகும்.

இன்றைய பங்கு விலை நிலவரம்?
பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலையானது (3 மணி நிலவரப்படி) என்.எஸ்.இ-யில் தற்போது 3.37% வீழ்ச்சி கண்டு, 557.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 588 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 533 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலை 3.19% சரிந்து, 556 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 589 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 551.55 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2150 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 520 ரூபாயாகும்.
Paytm shares crashed over 70% from issue price: is there any hope for an upside ?
Paytm shares crashed over 70% from issue price: is there any hope for an upside ?/வாய்ப்பிருக்கா.. 70% மேலாக வீழ்ச்சி கண்டுள்ள பேடிஎம்.. மீண்டும் வருமா.. நிபுணர்களின் கணிப்பு?