கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது. இன்று 30-வது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது.
தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை இடைவிடாமல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் நாட்டை மூன்று முனைகளில் ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகின்றன. உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.
ஆனால் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பெரிய நகரங்களை ரஷியா இன்னும் கைப்பற்றவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினர் கடும் சவால் அளித்து வருகிறார்கள். கீவ் புறநகரில் ரஷியா கைப்பற்றிய ஒரு பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டது. இதனால் ரஷிய ராணுவம் தங்களது தாக்குதலை கடுமையாக்கி உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை மே 9-ந்தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் ஆயுத படைகளின் பொதுப் பணியாளர்களின் உளவுத் துறை கூறும்போது, “மே 9-ந் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ரஷிய துருப்புகளிடம் கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மே 9-ந்தேதி ரஷியாவில் ஜெர்மனியின் நாஜி படையை வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் தரப்பில் கூறும்போது, “ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பணயக் கைதிகளாக பயன்படுத்தப்படலாம்.
இதன் மூலம் சரண் அடையுமாறு உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்கலாம். 84 ஆயிரம் குழந்தைகள் உள்பட 4 லட்சம் பேர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ரஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நேட்டோ அமைப்பு இது வரை இவ்வளவு ஒற்று மையாக இருந்ததில்லை. இது ரஷிய அதிபர் புதினின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி உள்ளது.
உக்ரைனில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் நேட்டோ படைகள் பதிலடி கொடுக்கும். பதிலடியின் தன்மை பயன்பாட்டின் தன்மையை பொறுத்து இருக்கும் என்றார்.
நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, காணொலி மூலம் பேசும்போது, உக்ரைனுக்கு ஆதரவு அளித்தற்கும், ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கும் இணைந்து பணியாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இந்த நடவடிக்கைகள் முன்னதாக எடுக்கப்படவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்காக உக்ரைனின் விண்ணப்பத்தை விரைவாக பரிசீலிக்க வேண்டும். இதில் தாமதிக்க வேண்டாம். எங்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்றார்.
இதையும் படியுங்கள்… தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசல் விலை 76 பைசா அதிகரிப்பு