புதுடெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கைக்கும், இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தோர் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் நிலவியது. விசாரணையில், போலி கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கி இழப்பீடுக்கு விண்ணப்பித்தது தெரிந்தது. இதனால், இந்த விவகாரத்தை ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புக்களை கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘போலி ஆவணங்களை அளித்து நிவாரண நிதி பெறுவது தொடர்பாக வேதனை அளிக்கிறது. இது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை’ என்று கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ‘மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 5 சதவீத கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்தலாம்’ என்று அனுமதி அளித்தனர். மேலும் வருகின்ற 28ம் தேதி வரை கொரோனா இழப்பீடு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான கால கெடு 60 நாட்களாக நிர்ணயிக்கப்படுவதாகவும், அதன் பின் விண்ணப்பிப்போருக்கு 90 நாட்கள் காலஅவகாசம் நிர்ணயிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டனர்.