மக்களுக்கு உதவாதது தமிழக அரசின் பட்ஜெட்- ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேச்சு

சென்னை:

தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பா.ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று மாநில தலைவர்
அண்ணாமலை
பேசியதாவது:-

தி.மு.க. மாடல் டெவலப்மென்ட் என்று மக்களை ஏமாற்றும் திட்டத்தை உடைப்பதற்கான நேரம் வந்துவிட்டது.

தேர்தல் நேரத்தில் நிறைவேற்ற சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தார்கள்.

நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி என்றார்கள். பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் ரூ.4-ம், சமையல் கியாஸ் ரூ.100-ம் குறைப்போம் என்றார்கள். இன்னும் குறைக்கவில்லை.

தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துள்ளார்கள். அந்த திட்டத்தில் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை பெண்கள் பலன் அடைவார்கள். அதை ரத்து செய்துவிட்டு உயர் கல்விக்கு ரூ.36 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதை சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் கூறாதது ஏன்?

தமிழகத்துக்கு ரூ.16 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தராததால்தான் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று நிதி அமைச்சர் கூறினார்.

ஆனால் இப்போது சட்டமன்றத்தில் நிலுவைத் தொகை ரூ.6,500 கோடியை மத்திய அரசு தந்துவிட்டதாக கூறி உள்ளார். 10 மாத காலம் மக்களை ஏமாற்றியே ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டும் மக்களுக்கு உதவாத பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., எச்.ராஜா, கரு.நாகராஜன், எம்.எல்.ராஜா, கராத்தே தியாகராஜன், துரைசாமி, திருப்பதி நாராயணன், சதீஷ்குமார், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வக்கீல் செந்தில்குமார், சக்ரவர்த்தி, காளிதாஸ், டால்பின் ஸ்ரீதரன், என்.ஆர்.பி. ஆதித்தன், யமகா சுரேஷ், சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மனோகரன், ஆர்.வி.நிரஞ்சன்குமார், அருண்குமார், சீமான் செந்தில் நாதன், பிரபு கணேசன், ஆர்.என்.சிவகுமார், மோடி சிட்டிபாபு மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.