மண்டல் கமிஷனை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் வி.ஆனைமுத்து: டெல்லியில் ஆ.ராசா புகழாரம்

புதுடெல்லி: மண்டல் கமிஷனை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் வி.ஆனைமுத்து என்று புகழாரம் சூட்டியுள்ளார் திமுக எம்.பி. ஆ.ராசா

முன்னதாக நேற்று (மார்ச் 24) பேரறிஞர்.வி.ஆனைமுத்து-முனைவர்.ஆர்.எம். லோகியா நினைவு சொற்பொழிவு, டெல்லியின் அரசியல் நிர்ணய சபையின் துணை சபாநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய திமுக எம்.பி. ஆ.ராசா, சமூக-அரசியல் வர்க்கத்தை ஒன்றிணைப்பதிலும் மண்டல் கமிஷனை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியதாக ஆனைமுத்துவிற்கு புகழாராம் சூட்டினார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா தனது உரையில், “பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடுக்காக ஆனைமுத்துவின் பணி மற்றும் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. இதற்காக, வட இந்தியா, பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் கடினமான காலங்களில் ஆனைமுத்து பயணித்தார்.

சமூக-அரசியல் வர்க்கத்தை ஒன்றிணைப்பதிலும், மண்டல் கமிஷனை செயல்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்த மெலிந்த, ஆனால் புத்திசாலி மனிதரான ஆனைமுத்துவுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும்.

அண்ணா, கருணாநிதி போன்ற மாபெரும் அரசியல் தலைவர்கள் கூட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நீதி பெற்றுத் தருவதிலும், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதிலும் தங்களை ஈடுபடுத்தினர்” என்றார்.

இதே நிகழ்ச்சியில், சாதிகள் மீதானப் பெரியாரின் பார்வை பற்றி மாநிலங்களவையின் திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “கிரேக்க மற்றும் ரோமானியப் பேரரசில் இருந்து படையெடுப்பாளர்கள் கொண்டு வந்த நடைமுறை திராவிட கலாச்சாரத்தின் அல்லது அங்கு வாழும் மக்களின் பகுதியாக இல்லை. விந்திய மலையைத் தாண்டியுள்ள தென்பகுதியில் திராவிடர்கள், மனுதர்மத்தை கடைப்பிடிக்கவில்லை. சத்ரிய வம்சத்தின் மன்னர்கள் ஆட்சிபுரிந்த அப்பகுதியில் அனைவரும் சரிசமமாகக் கருதப்பட்டனர்” எனக் குறிப்பிட்டார்.

சுமார் 150 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக அரசியல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் இதர வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் சமூக சீர்திருத்தத்தில் லோகியாவின் தாக்கம் பற்றி, பூர்வாஞ்சல் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பி.சி.பதஞ்சலி உரையாற்றினார்.

இந்தியப் பெண்களைப் பற்றிய பி.ஆர்.அம்பேத்கரின் பார்வை எனும் தலைப்பில், டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் பேராசிரியர்.கே.பி.உஷா உரையாற்றினார். பி.சிக்கள், எஸ்.சிக்கள், எஸ்.டிகள் மற்றும் ஆர்.எம்களுக்கான அகில இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலச ராமலிங்கம் உரையாற்றினார். இதில் அவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வளர்ச்சியில், ராம் அவதேஷ் சிங்கின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வை, அகில இந்திய பி.சி எஸ்.சி எஸ்.டி மற்றும் மதசிறுபான்மையினர் மற்றும் பெரியார்-அம்பேத்கர் சர்வீஸ் சொசைட்டி (புது டெல்லி) கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இறுதியில், டெல்லியின் மூத்த வழக்கறிஞரான லெனின் வினோபர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.