நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கி உயரதிகாரிகள் மற்றும் நாணயச் சபையின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமை தொடர்பில் வருந்துவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (24) கூடிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அதற்கமைய, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட மத்திய வங்கி உயரதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஏனைய அதிகாரிகளான திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி ஜயமஹ மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் இவ்வாறு அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர் திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுக்கு உலக வங்கியுடன் கலந்துரையாடல் ஒன்று இருப்பதால் ஏனைய உறுப்பினர்களுக்கும் நேற்று (24) குழுவில் கலந்துகொள்ள முடியாது எனவும், அதற்காக பிறிதொரு தினத்தை வழங்குமாறும் அறிவித்து மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் இந்தக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (21) இடம்பெறவிருந்ததுடன் மத்திய வங்கி அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய கூட்டம் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் இந்தச் செயற்பாடு பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்பது அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. இது தொடர்பில் கண்டறிவதற்கு சபாநாயகருக்கு முறைப்பாடு செய்வது பொருத்தமானது என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் இந்தக் கூட்டத்தை மீண்டும் ஏப்ரல் 01 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ விஜித ஹேரத், (பேராசிரியர்) கௌரவ ரஞ்சித் பண்டார, கௌரவ நளின் பர்னாந்து, (கலாநிதி) கௌரவ ஹர்ஷ டி சில்வா மற்றும் கௌரவ முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.