கார்கிவ்-கடந்த வாரம், உக்ரைனின் மரியுபோல் நகரின் கலாசார மைய அரங்கில் ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட, 300 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.த
ரைமட்டம்’நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய விரும்பிய உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், போலந்து உள்ளிட்ட அதன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். நாட்டை விட்டு வெளியேற முடியாத மக்கள், பதுங்கு குழிகளில் தஞ்சம்அடைந்துள்ளனர்.
கடந்த 16ம் தேதி, துறைமுக நகரமான மரியுபோலில், கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கத்தின் மீது, ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அந்த வளாகம் இடிந்து தரைமட்டமானது. மூன்று மாடிகளை உடைய இந்த அரங்கில் நுாற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். எனினும், அதில் உயிரிழந்தோர் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.இந்நிலையில், அந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 300 பேர் உயிரிழந்ததாக, மரியுபோல் நகர நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சூழல்
ரஷ்யா – உக்ரைன் இடையிலான இந்தப் போரில், இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. ரஷ்ய படையைச் சேர்ந்த 1,351 வீரர்கள் இந்த சண்டையில் உயிரிழந்துள்ளதாகவும், 3,825 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், ரஷ்ய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.உலக நாடுகளின் எதிர்ப்பு, சர்வதேச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை மீறி, ரஷ்ய படையினர் உக்ரைனில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் அறிவுறுத்தல்
உக்ரைன் மீதான போர் துவங்கியது முதல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜோ பைடன் கூறுகையில், “ஜி – 20 கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது,” என்றார். உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளை உள்ளடக்கியது, ஜி – 20 கூட்டமைப்பு. ஐரோப்பிய யூனியன் போக, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.