மதுரை: அகில இந்திய அளவில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு திமுக, அதன் தொழிற்சங்கமான தொமுச உட்பட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளம் பிடிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அத்தியவாசியமான, பல லட்சக்கணக்கான மக்களின் அன்றாட பயண வசதியை நிறைவேற்றித்தரும் பொது சேவை நிறுவனமாகும். மார்ச் 28, 29-ல் அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்பது பொதுமக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உட்பட அனைத்து அத்தியவாசிய பணிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே, மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அனைத்து பணியாளர்களுக்கு தவறாமல் பணிக்கு வர வேண்டும். அந்த 2 நாட்களும் எவ்வித விடுமுறையும் அனுமதிக்கப்படாது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகிறது. அந்த 2 நாட்களும் பணிக்கு வராமல் இருந்தால் விடுமுறையாக கணக்கிட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பணிக்கு வராத பணியாளர்கள் மீது துறை ரீதியாகவும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அனைத்து தொழிலாளர்களும் சட்டவிரோத வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதை தவிர்த்தும், தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருப்பதை தவிர்த்தும், பொதுமக்களின் நலனின் அறக்கறை, போக்குவரத்து கழக வளர்ச்சியில் பெரிதும் பங்கெடுத்து பணிக்கு வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.